மூழ்கினேன்
இத்தனை எழிலாய் எப்படி இறைவா
அத்தனை அழகும் ஒருதிரளாய்
கற்பனை யாவும் திணறித் திண்டாடும்
காட்சிகள் கடலென விரிந்தனவே
பச்சைப் பேரெழில் எங்கும் பளிச்சிட
புன்னகை வனங்கள் துளிர்த்திருக்க
மிச்சமில்லாமல் வண்ணங்கள் கோடியும்
மலர்களின் இதழாய்ப் புலர்ந்திருக்க
வாசமே வன வாசமே உனை
உணர்வதும் காண்பதும் ஒரு சுவையே
பேசிடா சில மௌனங்கள் மிக
தெளிவாய்க் கேட்பது புது சுவையே
மனிதர்களில்லா தனிவழிப் பாதை
காரிருள் சூழ்ந்த கானகமே
பயமெனும் கானல் சிலநொடி தானே
கண்கள் பருகிய பேருலகே
வளைகிற சாலை எதிர்வரும் புதிராய்
பரவசப் பயணமும் சுழல்கிறதே
சில்லென காற்றும் மெல்ல என் நேற்றும்
அணைத்திட அமிழ்தென இசை தருதே
உரசிடும் மூங்கிலும் சல சல அருவியும்
ஸரிகம பதநிஸ சுயம்வரமே
மகிழ்ச்சியில் மூழ்கிய மனமொழி யாவிலும்
சிறு சிறு கவிதைகள் வலம்வருமே
எத்தனைஅதிசயம் உன் படைப்பில்
வித்தகன் நீயென நான் அறிவேன்
இப்படியெல்லாம் படைத்துவிட்டால்
எப்படி மீள்வேன் காருண்யனே!