ஈரோடு தமிழன்பன் கவிதை

மதம்
மாறச் சொல்வதல்ல இஸ்லாம்
மனம்
மாறச் சொல்வது இஸ்லாம்

குணம்
மாறச் சொல்வது இஸ்லாம்
சாதியை மறந்து
மனித குலம் ஒன்றாக
மாறச் சொல்வது இஸ்லாம்

பேதங்கள்
துறந்து ஒற்றுமை
வேதம் ஓதச் சொல்வது இஸ்லாம்

சடங்கில்
சம்பிரதாயத்தில் இல்லை இஸ்லாம்
அன்பில்
அறத்தில் இருப்பது இஸ்லாம்

சூத்திரத்
தோத்திரங்களில்
ஆணவச் சூத்திரங்களில்
இல்லை இஸ்லாம்

பரப்பப்
படுவதில்லை சூரிய ஒளி
தானாகப் பரவும்

குளிர்ச்சிப்
படுத்தப்படுவதில்லை,
குளிர்ந்து இருப்பது நிலா

உத்தரவு போட்டு
உதட்டில் புன்னகை உற்பத்தி
நடக்காது
மலர வேண்டும் தானாய்,
இயற்றப் பட்டதல்ல
இஸ்லாம்!
இயல்பாய் இருப்பது!

சண்டைகளின்
கண்டுபிடிப்பல்ல சமரச இஸ்லாம்
தத்துவத் தகராறுகளின்
ஆய்வுக் கூடமல்ல இஸ்லாம்

அப்துல்லாவிடமும்
அமானுல்லாவிடமும் இருப்பது போலவே
ஆறுமுகத்திடமும் அகஸ்டீனிடமும்
இருக்கும் இஸ்லாம்

ஏனெனில்
இஸ்லாம் என்பது
இடுகுறிப் பெயரில்லை;
காரணப் பெயர்!

எழுதியவர் : ஈரோடு தமிழன்பன் (27-Jun-15, 12:23 am)
பார்வை : 394

மேலே