காக்கை குருவி எங்கள் சாதி

மூக்கோடு
மூக்குரசி
மாற்றிக்கொண்ட
சுவாசத்திற்கும்

உன் கெண்டைக்காலில்
வழுக்கித் திரிந்து
என் மார்புப்பரப்பில்
மஞ்சளடித்த
குளத்து மீனுக்கும்

என் கைவிசையில்
உயிர் ஏற்றி
உன் கன்னக்குழியில்
தெறித்து மாண்ட
பேருந்து ஜன்னலொழுகு
மழைத்துளிநீருக்கும்

உனக்காக காத்திருக்கையில்
எனக்கும்
எனக்காக காத்திருக்கையில்
உனக்கும்
எப்போதும் நிழலளித்த
மரத்திற்கும்

நீரில்லா காலத்தில்
ஓடிப்பிடித்து விளையாடிய
நம் சுவடுகளை
நதியாக்கிக்கொண்ட
படுகைக்கும்

நீ கைகுவித்து
சிறையெடுத்து
என் கண்ணிரண்டில்
குடியேற்றிய
ஆரத்திச் சூட்டிற்கும்

தெரிந்திருக்குமா?

நீ வேறு சாதி
நான் வேறு சாதி
என்பது.

எழுதியவர் : ஈ.ரா. (27-Jun-15, 8:24 pm)
பார்வை : 202

மேலே