அடல்பிகாரி வாஜ்பாய்

ஆதவனின் முகம் கண்டுத் தாமரைப்பூ
அன்றாடம் மலர்தல்போல் யானும் இன்று
நீதிநெறி பற்றிநிதம் நடந்துசெல்லும்
நேர்மையனாம் வாஜ்பாயின் புகழைப் பாட
கீதமிசை மாங்குயிலாய் தமிழைப் பற்றி
கிளம்பிட்டேன் பூங்கவிதை பற்றி எந்நாளும்
சாதனையால் புகழ் கொள்ளும் கோட்டைமன்னன்
சரித்திரத்தை ஏந்திவரும் புனிதம் கொள்ளும் !

பன்னாட்டு மக்களெலாம் பாரதத்தின்
பண்பாட்டு நெறிமுறைகள் மேன்மைதன்னை
பொன்னேட்டில் பதித்துவிட நிதமுழைத்து
புகழ்பாட்டைப் பெற்றவனாம் ! வளமை கொஞ்ச
இந்நாட்டில் பல்வேறு திட்டமெலாம்
இயற்றித்தான் செயல்பட்டான் ! ஏக்கமெல்லாம்
மண்ணோடு மண்ணாக மடிந்துபோக
மங்காத வளம்தந்து விளங்கி நின்றான் !

மதிநுட்பம் கொண்டவனாம் அடல்பிகாரி
மடைதிறந்த வெள்ளம்போல் கவிதையாற்றல் !
அதிவேக செயலாற்றல் ! கொண்ட கொள்கை
அசையாமல் ஆடாமல் தாங்கிக்கொண்டு
பதிக்கின்ற தடம்மாறிப் போய்விடாமல்
படைகொண்டு போர்வெல்லும் மன்னர்மன்னன் !
உதிக்கின்ற செங்கதிரோன் ! தாமரைமைப்பூ !
உள்ளம்கொள் மால்வண்ணன் ! தளையமைச்சன் !


பிஞ்சப்போல் இலநெஞ்சன் பாரதத்தின்
பேர்சொல்லும் புரிசங்கு ! பிள்ளைகள் பால்
கொஞ்சுகின்ற எழில்கிள்ளை ! குளிர்நிலா போல்
குறையற்ற பளிமுகத்தோன் ! தொட்டால் வெண்மைப்
பிஞ்சைபோல் மென்கரத்தான் ! இந்தநாடு
கெஞ்சாமல் நிமிரச்செய்த இமயவெற்பு !
கீழ்வானின் விடிவெள்ளி ! உதயகீதம்.

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.கனிம (28-Jun-15, 8:10 am)
பார்வை : 315

மேலே