கோவில்பிள்ளை என்கிற கோயிலான் அண்ணன்

கோவில்பிள்ளை என்கிற
கோயிலான் அண்ணனைப் பார்க்க கிராமத்திற்குப் போயிருந்தேன்
சைக்கிளின் முன் சக்கரம் நசுங்கி,
தனியே நிற்க முடியாமல்
மண் உதிர்ந்த சுவரில் ஆறுதலாய்
முந்தைய வித்தைகள் மறந்து, சாய்ந்து கிடந்தது
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால்
வீட்டுக்குள்ளேயே தண்ணீர் வந்ததால்
குளியலறையாகத் தன்னை சுருக்கிக் கொள்ளும் வாஞ்சையில்
தூர்ந்து போய்க்கொண்டிருந்தது
நீச்சல் சொல்லித் தரமுடியாத ஊர்க்கிணறு
கருங்கல்லில் கோலிக் குண்டு செய்து தந்த சுத்தியலை
முறிந்த கைப்பிடியோடு அவர் மகன்
கொண்டுவந்து காட்டினான்
இந்நாள் கதை சொல்லிகளாக சிலர்
புதிய திரைப்படமொன்றின் கதையை
அதையும் மிஞ்சியதொரு பாவனையில்
தலைமுறைக்குக் கடத்திக் கொண்டிருந்தனர்
முந்தைய அவதாரங்களின் அரிதாரம் ஏதுமின்றி
கயிற்றுக் கட்டிலிருந்து எழுந்து மெல்லச் சிரித்தார்
அந்த சிரிப்பு ஒன்றைத்தான்
கோயிலான் அண்ணனிடம்
இப்போது கற்று வரமுடிந்தது...!