புத்தகப் பை
வண்ணத்துப் பூச்சியின்
முதுகில்
வண்ணங்களின் திருடனாய்
சின்னக் குழந்தையின் முதுகில்
புத்தகப் பை
பறவையின் முதுகில்
பாறையாய்
சிறகுகளை இறக்க விடாத
பாரக் கல்லாய்
அந்த புத்தகப் பை
கலைக் கருவிகளா அவை
மழலையை கொல்லும்
கொலைக் கருவிகளாய் அவை
சுயத்தை
திருடித் தின்று
கொழுக்கும் புத்தகப் பை
எருதுகளின் முதுகில்
ஏர் பூட்டி
அடித்து உழுவது போல்
குருத்துகளின் முதுகில்
இந்த புத்தகப் பை
உழுதுப் போகிறது
இயந்திரங்களை உருவாக்கும்
இயந்திர கூடத்தின்
இயக்க முறைகளை
இயக்கிப் போகிறது
அந்த புத்தகப் பை
வியாபார சந்தையாய்
வலியவனை திணிக்கும்
அரசியலாய்
அந்த புத்தகப் பை
பணம் வசூலிக்கும்
ஈட்டிக் காரனாய்
அந்த புத்தகப் பை