சா தீ
முன்னோர்களில்
முட்டாள்கள் சிலர்
மூட்டியிருக்கவேண்டும்
இன்னும்
அனையவேயில்லை
சா தீ
என் அப்பனும்
ஆத்தாளும் மட்டுமல்ல
என் பாட்டனும் முப்பாட்டனும்
கண்டதேயில்லை
கோவில் கருவறை
சாமி தரிசனம் வேண்டி நான் கோவிலில் நுழைந்துவிட்டதற்கு
கொடுக்கப்பட்டது
சவுக்கடி தண்டனை
மெல்ல ஆறிவிட்டது
சவுக்கடி பட்ட ரணம்
ஆனாலும் ஆற மறுக்கிறது
நீ கீழ் சாதி
என்ற சொல் சுட்ட என் மனம்
வேலைக்களைப்பினால்
நாவரண்டு
கையேந்தி
தாகம்
தீர்க்கிறாள் ஆத்தாள்
குவளை தொட்டு
நீர் அருந்த முடியாத நிலை
பாத்திரம் தொட்டால்
பட்டு விடுமாம் தீட்டு
என் மக்கள் உழுத வயலுக்கும்
,கலை பறித்த நெல்லுக்கும்
,கறந்த பாலுக்கும் மட்டும்
படுவதேயில்லை போலும்
அவர்கள் சொல்லும் தீட்டு
குளத்தில் வேற்றுமை காணும்
மா க்கள்
சிலர்
புரிந்துகொள்வதேயில்லை
குருதியில்
வேற்றுமை கானவியலாதென்பதை
உயிர் உடல் அமைப்பில்
வேற்றுமை படைக்கவில்லை
எல்லோரையும் படைத்த இறைவன்
என்பதை எழுதும்போதே
என் நெஞ்சில் உதிக்கிறது
என் சாதி மக்களை தொட்டு படைக்கையில்
இறைவனும் தீட்டு
பட்டிருக்க வேண்டுமே
என்று .