மறையும் மனிதனும் மறையாத பொம்மையும்

பிறந்தது முதல்
விபரம் தெரியும் நாள் வரை
பொம்மைகளோடு வாழ்வோம்...

பொம்மையைக் கொடுத்தால்...
அழுவதை நிறுத்தியிருப்போம்
பிடிவாதத்தை அடக்கியிருப்போம்
வலியை மறந்து சிரித்திருப்போம்
பசியெடுக்காவிட்டாலும்
பால்சோறு சாப்பிட்டு முடித்திருப்போம்
தாலாட்டு இல்லாமல் கூட
தூங்கி விழித்திருப்போம்
முக்கியமாக
சொல்வதெல்லாம் கேட்டுத் தொலைத்திருப்போம்....

விபரம் தெரிந்த நாள்முதல் இறக்கும்வரை
பொம்மைகளைப் போலவே வாழ்வோம்...

ஆசிரியர்களின் கற்பித்தலில்
ஆமாம் போட மறப்பதில்லை
தலைவர்களின் அதட்டல்களில்
தலையாட்ட மறுப்பதில்லை
மருத்துவர்களின் கேள்விகளில்
மனதில் எதையும் மறைப்பதில்லை
முதலாளிகளின் திட்டல்களில்
முகம் மலர தவறுவதில்லை
பணம் புகழின் வருகைகளில்
பின்னால் செல்ல நிறுத்துவதில்லை
முக்கியமாக
ஆசைகளின் அழைப்புகளில்
அடிமையென நிற்க தயங்குவதில்லை...

கடைசியில்
இறந்த பிறகு நாம்
உண்மையில் பொம்மையாகி விடுவோம்...

பொம்மை கிடைக்காதெனத் தெரிந்தால்
குழந்தைப் பருவத்தில் நாம் அழுததைப் போல
எல்லோரும் நம்மைப் பார்த்து
அழுது கொண்டிருப்பார்கள்
இனி இந்த பொம்மை கிடைக்காதென்று...

************* ஜின்னா *************

எழுதியவர் : ஜின்னா (5-Jul-15, 3:20 am)
பார்வை : 602

மேலே