தலைவன்களும் தலைவியரும்-ரகு
தகுதியான
கன்னியர் வேண்டி
நாளுக்கு நாள்
தவங்கிடக்கின்றன
முதிர் ஆண்களின்
முகவரிப் படலம்
ஓடும் நீரில்
பிழை காணத் துணிந்த
நாணல்
நனைய மறுத்து
சருகாகிவிடுதல் போல
சயனம் மேவுகிறது
சாதீயமும்
இது கருப்பு
இல்லை படிப்பு
மிகை வறுமை
கொஞ்சம் குள்ளம்
ம்ஹூம் நெட்டை
சவடால்கள்
தூர்ந்து கசிகிறது
சுவாசங்களும்
கள்ளிப்பால்
சுரந்த கதையெல்லாம்
பழையனவாகிவிட்ட
நாகரிக நிலையிலும்
திறந்த கதவுக்கு
முன்னும் பின்னும்
காத்திருந்து
ஏங்குகிறார்கள்
தலைவன்கள்
வாட்ஸ்அப் பேஸ்புக்
வேடந்தாங்கலில்
சிறகுலர்த்தியத்
தடையங்களோடு
வாழ்வியம் கற்றதாய்
அலுவலகம் பறக்கும்
தலைவியர்க்கோ
திறந்திருக்கும்
கதவுகளெல்லாம்
எப்படி
வானமாகக்கூடும் ..?!