முத்த தின வாழ்த்துகள் - வினோதன்

நெருப்பு நெருங்கிய
நெகிழிக் குழம்பு
உருளை அச்சை
உண்டிருக்க வேண்டும் !

ஈரப்பதம் ஏறியபின்
இருபக்க வாசலையும்
கரும்புக் கணுவென
கூர் கருவிகள்
கிழித்திருக்க வேண்டும் !

தெருக்கதவும்
புறவாசல் கதவுமற்ற
உருளை வீட்டின்
இருபக்க வெளிகளில்
கிருமி நாசினிகள் - குடி
புகுந்திருக்க வேண்டும் !

உதித்த சூரியனை
மதித்தெழுந்து நின்ற
பருத்திச் செடியின்
வெண் தங்கம் - பல
இயந்திரப் படிகண்டு
வெளுத்திருக்க வேண்டும் !

பருத்திப் பஞ்சுகள்
குழுக்களாய் பிரிந்து
சிறு நெகிழி உருளையின்
வாசல்களை விழுங்கியபடி
சுருண்டு மயங்கி
வீழ்ந்திருக்க வேண்டும் !

காற்றின் கால்தடம் காணா
நெகிழிப் பொட்டலங்களில்
வரிசைகட்டி படுக்க வைத்து
விலையெனும் அரைஞான்
கட்டி - மக்கள் பார்வை பட
அங்காடி கண்டிருக்க வேண்டும் !

இருபக்கமும் பூத்த
செயற்கை மொக்குகளை
நெக்குருகி - நம் காதோடு
முத்தமிட பணிக்கிறோம் !

ஊக்குகள் தராத சுகத்தை
இப்பருத்தி மொக்குகள்
தருமென்பதை காட்டிலும்,
சீழ் பையின் வாசலை
தொடாதொருபோதும்,
சிக்கல் தராதுதொருபொதும் !

ஊக்குகள் தவிர்த்து
பருத்தி மொக்குகள்
பயன் படுத்தி - காதுகளை
மித முத்தமிடுவோம்
செவியாயுள் சேமிப்போம் !


(ஹா ஹா ஹா...இது நாம் காதுகுடையும் பட்ஸ் பற்றியது... வேறெதையும் எதிர்பார்த்து ஏமாந்தவர்களுக்கு கம்பெனி பொறுப்பேற்"காது". )

எழுதியவர் : வினோதன் (7-Jul-15, 6:45 am)
பார்வை : 137

மேலே