மாலைமாற்று மாலை - காப்புச் செய்யுள் 2

மாலைமாற்று மாலை நூலின் காப்புச் செய்யுளாய் மாலைமாற்றில் அமைந்த கட்டளைக் கலித்துறைப் பாடலும், பதவுரையும் தருகிறேன்.

மாலைமாற்று மாலை – காப்பு - மாலைமாற்று - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறையில் 16 எழுத்துப் பாடலாக அமைந்த மாலைமாற்று காப்புச் செய்யுள்.

வேறல மேலவ வாமன மாவய வேதறுவீ
நாறு சமாகய நாடுர வேள்கவி பாடுறமா
மாறடு பாவிகள் வேரடு நாயக மாசறுநா
வீறுத வேயவ மானம வாவல மேலறவே.

பதவுரை:

வேறு அலம் – (அல்லம்) – (யாம் நின்னடிமையேயன்றி) வேறில்லை
மேல அவாம் மனம் ஆ – மேலானவற்றையே விரும்புகின்ற மனமாகிய
வயவு ஏது அறுவீ - ஆசையாகிய பிறப்பின் காரணமற்ற மலரின்கண்
நாறு சமா – தோன்றுகின்ற நடுவுநிலைமையுடைய
கய – யானை முகத்தானே
நாடு உர வேள் கவி பாடுற – விரும்புகின்ற திண்மையுடைய செவ்வேளது மாலை மாற்றுக் கவிமாலை பாடுதற்கு
மா மாறு – பெருமை நீங்கிய
அடு பாவிகள் – கொலை பாதகர்களை
வே அடு நாயக – முதலோடு அழிக்கின்ற நாயகனே
மாசு அறு நா வீறு உதவு – குற்றமற்ற நாவன்மையை அருளுக
ஏய் அவம் – என்னிடத்தில் பயனில் செயல்களும்
மானம் – செருக்கும்
அவா – ஆசையும்
அலம் – துன்பமும் (ஆகிய இவைகள்)
மேல் அற – இனிமேல் ஒழியுமாறு
ஏ – அசை

பொருளுரை:

மேலானவற்றையே விரும்புகின்ற மனத்தின் காரணமற்ற பெரும் ஆசையினால் ஏற்படுகின்ற குற்றங்களை நீக்குகின்ற மலரினைப் போன்ற நடுவுநிலைமை உடைய யானை முகத்தானே! பெருமை நீங்கிய கொலை பாதகர்களை அடியோடு அழிக்கின்ற நாயகனே! என்னிடத்தில் உள்ள பயனில் செயல்களும், செருக்கும், ஆசையும், துன்பமும் ஆகிய இவைகள் இனிமேல் ஒழியுமாறு, விரும்புகின்ற திண்மையுடைய செவ்வேளது மாலை மாற்றுக் கவிமாலை பாடுதற்கு குற்றமற்ற நாவன்மையை அருள் புரிய வேண்டும். யாம் நின்னடிமையேயன்றி வேறில்லை.

என் குறிப்பு:

வயவு - வலிமை. தாவா தாகு மலிபெறு வயவே (பதிற்றுப். 36, 2).
வயவு - 1. வயாநடுக்கம். வயவுறு மகளிர் (புறநா. 20)
2. விருப்பம், வேட்கை, ஆசை - வயவேற நனி புணர்மார் (பரிபா. 11, 67) - Desire, love, affection

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (8-Jul-15, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 181

புதிய படைப்புகள்

மேலே