மரணம் விற்க்கப்படும்

ஊசி முனையில்
உயிர்வாழும் கூர்மையான வாழ்விங்கே...!

மாத்திரைகள்
மாத்திரமே
மரணத்தை தள்ளிப்போடும்.!

மருந்துவாடைக்கும்
மரணவாடைக்கும்
சில நெடி மட்டுமே வேறுபடும்..!

நாத்திகன் கூட கடைசி அஸ்த்திரமாய்..
கடவுள் பெயரை இங்கே உச்சரித்திருக்கக்கூடும்.!

மரணத்தின் வாசலில்..
போடப்பட்ட கோலம்தானே..
இந்த மருத்துவமனைகள்.!
கோலம் மிதித்து நாம் உள்ளே செல்கிறோம்.!
அல்லது வெளியே செல்கிறோம்.!

இங்கே கிடக்கும்..ஒவ்வொரு படுக்கையும் எத்தனைபேரை
விழுங்கிஇருக்கக்கூடும்.!?

இளமையில்..
பிறப்பின் உறுதியில்இருந்து
எண்ணப்படும் வயது,
முதுமையில் இறப்பின்
உத்தேசத்தில் இருந்து
கணக்கிடப்படுகிறது.!

சுவட்ரு பல்லியின்
சுதியும்..
சொட்டும்நீரின் ஒலியும்..
தனிமையின் கோரத்தை
செவியில் நுழைக்கும்.!

படுத்தே கிடப்பதென்பது ஏவ்வளவு துயரமானது.?

திறந்த விழியின் நீர் துடைக்க..
வழு இன்றிப்போக
வழிந்தோடும் கண்ணீர்..
காது நோக்கி பயணமாகும்.!

உயிருக்கு துனை இல்லாமல் போனதையும்..
உடலுக்கு நிழல் இல்லாமல் போனதையும் உணருவோம்..!

செய்த பாவத்திற்கேற்ப்ப..
ஆத்மா உடல் மாறும் என்பதை வரிகளாய் அன்றி
வலிகளாய் உணர துவங்கி இருப்போம்.!

வானமும் வாழ்கையும்..கூட
ஜன்னலுக்கு வெளியே
தெரிய துவங்கி இருக்கும்.!

சந்தித்தே தீரவேண்டிய
மரணம் என்பது
நோயில்லா முதுமையில்..
நித்திரையில்..
நிகழுமாயின் ..மரணம்கூட...இங்கே விற்றுதீர்ந்துவிடும்தானே.!!?

எழுதியவர் : நிலாகண்ணன் (9-Jul-15, 6:40 pm)
சேர்த்தது : நிலாகண்ணன்
பார்வை : 98

மேலே