உனைப்பாடாத பேனா கவி இசைக்குமா

குவிந்தாலும் குழிந்தாலும்
விழிக்கு விருந்து -நீ
வளர்ந்து தேய்ந்தாலும்
வயோதிகமற்ற வாலிபம் -நீ
இரவின்தேசத்தில் விண்மீன்
இசைக்கும் தேசியகீதம் -நீ
சூரியமறைவுக்குப்பின் சுருண்டிடாத
வெள்ளைச் சுமங்கலி -நீ
நட்சத்திர மாணவருக்கு
விசுவாமித்திர குரு -நீ
பேனாவின் தீர்ப்புகளில்
யுகயுகமாய் அழகி -நீ
ஒத்தையடி போனால்
உடன்வரும் சங்கீதம் -நீ
கேள் நித்தியநிலவே
உன்னோடு ஒரு வார்த்தை !
பேரண்டஎழிலைச் சுரண்டிநீ
வைத்தாலும் சோரம்போகா
யுவதி யொருத்தி -எம்
தெருவோரம்போவது கண்டாயோ !
மோட்சமென்பது அவள் தரிசனம்;
சாபமேன்பதோ அவளையறியாமை..!!
விழியாலவள் விளக்காவாள்
மொழியாலவள் அமுதாவாள்
வகைப்பாட்டியலில்- நீ கண்டிடாத
ஐந்திதழ் மலர்க்கையாள்..!
பலர்பார்க்க பவனிவரு நிலவே
இவளைக் கண்டிராத உலகினால்
உனக்கு மிகப்பெயரே -ஆதலால்
உடன் வான்விட்டு வா நிலவே
உனக்கு என்னவளை
அறிமுகம் செய்வேன்
அவளின் பணிப்பெண்ணாயும்
உனைப்பணி அமர்த்துவேன் ...!