நீ எங்கே என் தம்பி

கருவறை ஓரறை கொண்ட நமக்கு
கல்லறை மட்டும் வேற்றறையா?
கொண்டு சென்ற காலனுக்கு உன்னைக்
கொல்லும் மனம் தந்தது யார்?

ஜனனமோ தாய் மடியில்
மரணமோ அவன் பிடியில்
விதி என்னும் ஓர் வார்த்தை
என்றும் விளங்காத சூத்திரமோ?

மண்ணில் வந்ததெல்லாம்
மண்ணுக்குத்தான் போகுமென்றால்
பூலோகம் தான் எதற்கு?
பூமியிலே நாம் எதற்கு?

விளங்காத சூத்திரத்தை
விளங்க வைப்பார் யாருமில்லை!
தொலை தூரம் சென்ற தம்பி
உன்னை துரத்திடவும் வழி தெரியவில்லை!

எங்கிருந்தாய் எங்கிருப்பாய்
எத்திசையும் தெரியவில்லை!
உன்னுடலும் உன் மனமும்
சென்றதெங்கே தெரியவில்லை!

அக்கா என்று என்னை
அனுதினமும் அழைத்த உன்னை
எப்போது காண்பேனோ
என்றைக்கும் மறப்பேனோ!

ஆசைப் பட்டு ஆண்டவனைக்
கேட்டுப் பெற்ற என் தம்பி
தூர தேசம் போவாய் என்று
கொஞ்சமும் நினைக்கவில்லை

போய் வருவாய் என்ற இடம்
போகலையே செல்லத் தம்பி
போன இடம் தெரியலியே
போன தடம் புரியலையே

கல்லான உன் உடம்பு
செல்லரித்துப் போனதென்ன?
களங்கமில்லா உன் சிரிப்பில்
கள்ளிச் செடி பூத்ததென்ன ?

அத்தை எனும் ஒற்றை மொழி
உன் குழந்தை சொல்லுமென
நித்தம் நித்தம் நான் நினைக்க
பிணமெத்தையிலே படுத்ததென்ன?

இளையவனாய்ப் பிறந்த தம்பி
மூத்தவனாய்ப் பிரிந்ததென்ன ?
மணவறை நோக்காது நீயும்
பிணவறை நோக்கியதென்ன?

பத்து மாதம் சுமந்தவளை
பித்துப் பிடிக்கச் செய்து
பட்ட மரமாக்கி தினம்
வெட்ட வெளியாக்கி விட்டாய்!

உன் சுமையை சுகமாக்கி
கண் இமையை காவலாக்கிய
தாய்க்கு தந்த பாரமென்ன?
உன் மெய்க்கு வந்த கோரமென்ன ?

கண்ணாடி மெய்தனிலே
கல்லதனை விட்டவன் யார்?
சிதறியதோ உன் உடம்பு
வெடித்ததுவொ என் நரம்பு!

முன் சென்றாய் பின் வருவேன்
என் கதை தொடர் கதையல்ல!
உன் கதை சிறு கதையாக்கி
புதிர் கதையாய்த் தொடர்வதென்ன?

தம்பி என் ஒற்றைத் தம்பி!
சென்று விட்டாய் விண்ணை நம்பி
தீந்தழலில் தள்ளி விட்டாய் என்
நெஞ்சினை நீ கொன்று விட்டாய்!

வரமாட்டாய் எனத் தெரிந்தும்
வருந்தாமல் இருக்கச் செய்ய
என் மனமென்ன கல்லோ?
அதுவும் ஒரு கண்ணாடி!

உடைந்த அந்த கண்ணாடி
ஒட்டி விட வேண்டுமெனில்
ஓடி இங்கு வந்துவிடு
இல்லை அங்கு அழைத்து விடு!

- முனைவர். ரத்னமாலா புரூஸ்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 27 வயதில் என்னை பிரிந்த என் தம்பிக்காக நான் எழுதிய கவிதை .....

எழுதியவர் : Rathnamala Bruce (17-Jul-15, 11:24 am)
Tanglish : nee engae en thambi
பார்வை : 271

மேலே