நெருப்பில்லாமல் புகையாது ---- வித்தியாசமான முயற்சி

சால்ட் நிறத்தில் நானிருந்தாலும்
உன் பெப்பர் நிறம்தானடா எனக்கு பிடிக்கின்றது....!
Oil வடியும் உன் முகத்தை கண்டால் தானடா
என் ஆயுட்காலம் அழகாகின்றது....!

காதலிக்க தேவையானவை,,
போதுமான அளவு வலிகள்
ஒரு கப் புன்னகை
தேவைக்கேற்ப சண்டைகள்
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கண்ணீர்

மலிவு விலையில் கிடைப்பதற்கு
காதலென்ன கத்தரிக்காயா....?
பாரம் தாங்காமல் நசுங்கிவிட
என் காதலென்ன தக்காளியா...

ஒரு டீஸ்பூன் அளவாவது சிரி
அதை நினைத்துக்கொண்டாவது,
நான் உயிர் வாழ்ந்துவிடுகின்றேன்....!

நான் உயிர் வாழ தேவையான அளவு சர்க்கரை,
நீ கொடுக்கும் முத்தத்தில் தானடா இருக்கின்றது....

இரட்டை அர்த்தமுள்ள
அசைவப் பேச்சுகள் வேண்டாம்,
உன் சைவப் பார்வையே போதுமாட....!

என்னுள்ளே வரியா நீ..!
உன் முத்தங்களே,
எனக்கு பிடித்த பிரியாணி....

டீ,காபியை குடித்தும் வராத சுறுசுறுப்பு,
உன் பெயரை படித்ததுமே வந்துவிடுகின்றது....

நீ பேசும் பேச்சில்,
நான் சாதமாய் குழைகின்றேன்....

நெய்யாய் உருகி உருகி,
உனை காதலிக்கின்றேன்.....!

என் அப்பள இதயத்தை,
நொறுக்கி விடாதே.....!

எனக்கு பிடித்த உன் கன்னத்தை
ஊறுகாயை போல் தொட்டுக்கொள்ள ஆசை....!

சுடச்சுட அன்பை பரிமாறுகின்றேன்
என்று தான் ஆறும்
எனது காயங்கள்,,,,

என் கண்கள் அவ்வப்போது
கண்ணீரை வடிகட்டுகின்றது

கடுகு தாளிப்பது போல்
ஏன் என்னை தாளித்தெடுக்கின்றாய்....?

ஓரிரு நாளில் காய்ந்து விட
என் வலிகலென்ன
வத்தல்களா...?

இடியாப்பத்தை விட சிக்கலானது
என் வாழ்க்கை....!

என் மனம் தேங்காய் துருவலை போல்
மென்மையானது....!

என் காதல் ஆப்பாயில் போல்
ஒரு தலையானது....!

மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய்
வார்த்தைகள் சிக்கித் தவிக்கின்றன
உனை காணும்போதெல்லாம்

காரசாரமாய் நீ பேசும்போதெல்லாம்
வெங்காயம் அரியாமலேயே
கண்ணீர் விடுகின்றேன்

மிளகாய்குள் இருக்கும் விதையைப்போல
காதலை உன்னுள்ளே
ஏன் அடைத்து வைக்கின்றாய்....?

அரைப்படி கால்படி என
அளந்து போட
அன்பென்ன அரிசியா...?

நானென்ன கசாயமா
பிறகேன் எனைப் பார்த்தாலே
நீ முகம் சுளிக்கின்றாய்

உனைப்பற்றி பேசாத நாட்கள்
பாகற்காயை விட கசப்பானது...
உன்னோடு வாழும் நாட்கள்
தேனை விட இனிப்பானது....!

பாலில் கலந்த தண்ணீரைப் போல் தான்
என்னுள் இருக்கும் நீ,,,
என்னிடமிருந்து உனைப் பிரிப்பது
அவ்வளவு சுலபமல்ல.....

கருவேப்பிலையாய் என் இதயத்தை
நீ உருவி எடுத்துக்கொண்டதால் தான்
நான் கொத்தமல்லியாய் வதங்கிக்கிடக்கின்றேன்....

பெருங்காயமில்லா உணவில்
சுவையில்லை....!
பெரும்காயமில்லா மனதில்
சுகமில்லை....!

எளிதில் கெடாத புளியோதரையாய்
என் கற்பு மட்டும்
அதை உனக்கு மட்டுமே பரிமாற விரும்புகின்றேன்....!



குறிப்பு : படிப்பறிவில்லா ஒரு சமையல்காரி தன் காதலனுக்கு அவளுக்கு தெரிந்த வார்த்தையை கொண்டு ஒரு கவிதை எழுதுகின்றாள்......

எழுதியவர் : அகத்தியா (18-Jul-15, 3:34 am)
பார்வை : 321

மேலே