வாழும்போதும் வாழ்ந்த பின்னும் மக்கள் மனதில் நிற்கும் கவிஞர்
"வாழும்போதும் வாழ்ந்த பின்னும் மக்கள் மனதில் நிற்கும் கவிஞர்"
நாடி நரம்பில் எல்லாம் நற் றமிழே ஓடி
நன்னெறி புகட்டுகின்ற பாடல் பல பாடி
இறந்தாலும் வாழுகின்ற கவிஞர் பலருள்ளே
ஒன்றாகி வாழுகின்றார் ஷெரீப் புவியுள்ளே..!!
இறைச்சி தினமுண்ணும் இஸ்லாமிய பிறப்பு - இருப்பினும்
இராமலிங்க இறைநெறியில் காருண்ய நடப்பு
திரைத் துறையில் இருந்தாலும் நல்லொழுக்க வழியே
திறம்பட வாழ்ந்ததினால் கூடியது நற் புகழே...!!. .
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசுமிந்த உலகை
ஷெரீப் பாடியது மாறவில்லை இன்னுமிந்த நிலைமை
பணம் பந்தியிலும் குணம் குப்பையிலும் எழுதியது உண்மை
அவர் சாடலிலே ஒலித்திடுதே சமூகத்தின் தன்மை..!!
வற்றாத சுனை வழியே பொங்கி வரும் ஊற்றாய்
"அன்னையை போல் தெய்வமில்லை" பிறந்ததன்று பாட்டாய்
சீறாப் புராணதின்மேல் தீராக் காதல் - கொண்டதிலே
உரையெழுதி உயர்ந்த ஷெரீப் காவியச் செம்மல்...!!
வாழும் நெறி வகையினிலே கவிதைகளை புனைந்து
வாழுகின்றார் கா.மு.ஷெரீப் நினைவினில் நின்று
வாழும்போதும் வாழ்ந்த பின்னும் மக்கள் மனதிலே
நிற்கும் கவி புகழுலகில் நிலைத்து வாழுமே....!!
(குறிப்பு: இன்று மாலை தி.நகரில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய முப்பெரும் கவிஞர்களின் நூற்றாண்டு விழாவில் (கவிஞர்கள் கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் முத்துக் கண்ணப்பர்) வாசித்த கவிதை. தலைப்பினை தந்து வாசிக்கும் வாய்ப்பினை அளித்த சங்கத்தினருக்கு எனது நன்றிகள்)