பொய் விற்ற காசு

பொய்கள் விற்கப் புறப்பட்டேன்.

பொருளில்லையேல் வாழ்க்கை இல்லை,
பொய்கள் விற்கப் புறப்பட்டேன்.

உண்மைகள் எளிதினில் விற்பதில்லை,
பொய்மைகள் வாங்க பெருங்கூட்டம்.
உண்மைகள் தேடி வந்தனரும்,
பொய்களை வாங்கிச் சென்றனரே.

பொய்கள் தீர்ந்து போய்விடினும்,
அதற்கே மறுபடி அலைமோதல்.
உருவாக்குதலை சற்று அதிகரித்து,
அதிகம் செய்தேன் விற்பனையை.

என்னைச் சுற்றிலும் பொய்ப்பொருளே,
எங்கெங்கு காணினும் அசத்தியமே.
எம்மக்கள் அனைவர்க்கும் ஆனந்தம்,
எனக்கும் சேர்ந்தது பெருஞ்செல்வம்.

செல்வம் கொண்டு செல்கையிலே,
கள்வனிடம் நான் மாட்டி கொண்டேன்.
கத்தியைக் காட்டி மிரட்டிடவே,
பெருங்குரல் எடுத்து கதறுகிறேன்.

எங்கே காசு எனக் கேட்டான்.
இல்லை என்றே பதில் உரைத்தேன்.
"சொல்லாதே பொய்யென" அவன் குத்த
நாடதிர- நான் சிரித்து வீழ்ந்தேன்.

ஏனென்று தெரியாமல் அவன் முழிக்க
வினை அறுத்த கதை என்னுள்ளே.

எழுதியவர் : செந்ஜென் (22-Jul-15, 1:40 am)
சேர்த்தது : செந்ஜென்
Tanglish : poy vitra kaasu
பார்வை : 160

மேலே