விடுதலை
முதல் பால் கள்ளிப் பாலா,
முலைப் பாலா என்ற அச்சத்துடன்
பிறக்கும் பெண் பால்.
தலையெழுத்து என்று தாயே
திரும்பிக் கொள்ளும் கொடுமை.
தன் குடும்பத்திலேயே
பாரபட்சமாக நடத்தப்படுகிறாள்
காலத்தின் சுழற்சியில்
பூவாகிவிடும் பேதை
எப்படியாவது கொய்துவிட வேண்டும்
என துடிக்கும் ராட்சச வண்டுகள்.
வீட்டிலேயே சிறைப்படுத்தபடும்
சிறைப் பறவை
அவள் உணர்வை பார்க்காது
நிறைவேற்றப்படும் திருமண தண்டனை
இறைவன் கூட மனிதாபிமானமற்றவன்
பாரத்தை இவள் மட்டும்தான் சுமக்கிறாள்
ஏதோ பேச்சுக்கு
கருணை வடிவம் என்ற பட்டம்.
வீட்டுக்கு காவல்காரி
குழந்தை வளர்க்கும் வேலைக்காரி
அடிமையாக
தன் சொந்த வீட்டில்.
ஏனிந்த பெண் பிறவி.
அப்பாடா ஒரு வழியாக
இன்று அவளுக்கு விடுதலை
ஆம்,
அவள் இறந்து விட்டாள்.