கல்வியே கடவுள்

கல்வியே கண்கண்ட கடவுள் - கல்வி
கல்லாத பேர்களை கற்கச்செய் உலகில்
கல்வியால் ஆகாத துண்டோ? - அதைக்
கற்பதே கடமையில் முதலான தன்றோ?

நனியுண்டு நனியுண்டு நன்மை - கல்வி
நாட்டில் உயர்ந்திட செய்திடும் உண்மை
கல்விக்கு முதலிடம் தருவாய் - உனக்கு
செல்லும் இடமெல்லாம் சிறப்புண்டு அறிவாய்

ஆலினைப் போன்றதே கல்வி - அதை
ஆசையாய் கற்றிட செய்திடும் பள்ளி
பொன்போன்ற தல்லவோ காலம் - கல்வி
கண்போன்று வழிகாட்டி உயர்த்திடும் பாலம்

அறிவார்ந்த நூல்களைத் தேடு - அதன்
செறிவான பொருளாளே வெற்றியை நாடு
நாட்டிற்கும் உழைத்திட எண்ணு - சில
நலிவுற்ற மக்கட்கு நன்மையும் பண்ணு

அடக்கம் நல்லணிகலன் அணிவாய் - நல்
அறிவார்ந்த பெரியோர்க்கு எந்நாளும் பணிவாய்
பல்துறை அறிவையும் பெறுவாய் - நீ
பண்பை உன்உள்ளத்தில் தேக்கியே உயர்வாய்

உடும்பாய் பிடித்துறுதி காட்டு - உன்
குடும்பத்தைக் காத்திட நீதானே பூட்டு
நாள்தோறும் அனுபவம் பெற்று - இந்த
நானிலம் வாழ்த்திட வாழ்ந்திடு கற்று

உற்றோர்க்கும் மற்றோர்க்கும் உதவு - உன்
உறவுக்கு நீதானே வழிகாட்டும் கதவு
உள்ளத்திள் வைத்திடு ஊக்கம் - தினம்
உனைத்தேடி வந்திடும் உயர்வான ஆக்கம்.

எழுதியவர்
பாவலர் . பாஸ்கரன்

எழுதியவர் : (25-Jul-15, 5:01 am)
பார்வை : 214

மேலே