மாமழைத் தூரிகை

மாலையே ஓரழகு!-அதில்
மழையும் சேர்ந்துகொண்டால்...
கூடவே மலர்களும் பண்ணிசைத்தால்...

கொல்லென சிரித்த மேகங்கள்
சில்லெனப் பொழிந்த நீர்க்கவிதை
மழைத்துளியின் முத்தங்கள் பெற்ற பூமி
புதிதாய்ப் புலர்ந்ததைப் போல் சிலிர்த்தது
காட்சிகள் யாவும் தளிரொளி சூடிய ஓவியமாய்
மாயமாய்
மாமழைத் தூரிகை தீட்டிய தீஞ்சுவை...

நனைந்து கொண்டே இருந்தாலும்
கரையாத வரம் பெற்ற மனம்
மழைதானே அளிக்க இயலும்
அப்படி என்ன தான் இருக்கிறது
குடைகளின் கீழ்?
சாரலடிக்கிறதென சாளரத்தை சாற்றாமல்
கதவைத் திறந்து கொண்டு வெளி செல்லவேண்டும்
ஆகாயம் அழகிய வாளிபிடித்து
ஆனந்தம் ஊற்றுகிறதே...

அடடா!
அந்த சில்லென்ற காற்றும்
சலசலக்கும் ஊற்றும் பொழிகின்ற பொன்மாலை
முகம் மோதி அகம் சென்று
செல்களை சீண்டிவிட்டு சண்டைக்கிழுக்கும்
கட்டிப் புரண்டு மண்ணோடு மழை சுகிக்கும் வேளையில்
சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே செல்கிறோம்
என் கவிதையும் நானும்...
பின்தொடராமல் பரிதாபமாய்
என் சாளரம் வழி எட்டிப்பார்க்கும் குடை!

எழுதியவர் : மதுமதி.H (25-Jul-15, 8:56 am)
சேர்த்தது : மதுமதி H
பார்வை : 404

மேலே