திட்டோபாசுவா உருவாக்கிய உருண்டை

திட்டோபாசுவா உருவாக்கிய
உருண்டையிது என்று
ஒருவர் ஆரம்பித்திருந்த நேரத்தில்
பசோகாட் என்று மாற்றுங்கள்
தி என்று எழுதத்தொடங்குவது
பிடிக்கவில்லை என்றார்
இடைமறித்த ஒருவர்..
தி பக்கம் கொஞ்சம்
ப பக்கம் கொஞ்சமென
பிரிந்து நின்றவருள்
திடோவோ பசோ என்று
உட்பூசல் அரங்கேற்றங்கள்..
பலத்த சண்டைகளினூடே
பொல்லாத சூரிய மறைவுகளில்
முத்தச்சகிதங்களும் நடந்தேற
அங்கு குடியேறிய முப்பதுகள்
பெருகி விரிந்து கோடியாயினர்..
நதிபுசு எனும் சுவாச வாயு
மாசு படத் தொடங்கியது..
வட்டப்பெரிய இலைகள்
கொண்டவை இன்னும் வளர்ப்போம்
என்று விழிப்புணர்வுகள் தொடங்கின..
பச்சை திராவக நிலைகள்
குடிப்பதற்கு தகுதியவற்றையாக
மாறியிருந்த காலத்தில்..
அறிவு முளைத்த ஜீவிகள்
இன்னொரு உலகம் தேடி
சோக்கெட்டுகளில் பறந்து திரிந்து
ஒரு நீல உலகம் கண்டறிந்து
இங்கு ஜீவராசிகள் வாழ்ந்த
அறிகுறிகள் இருக்கிறதென
அங்குள்ள ஊடகங்ளில்
செய்திகளை பரப்பினர்..
பலத்த ஆராய்ச்சிக்கு பின்
இது பூமி என்று அன்று அழைக்கப்பட்டிருக்கலாம்
என்று வலுத்தச் செய்திகளை
வதந்திகளென சொல்லிச் சுற்றினர்
சிலர் சாக்கடை பச்சைகளை
வடிகட்டிக்கொண்டு...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (26-Jul-15, 7:08 pm)
பார்வை : 76

மேலே