கொலையாளி 5 பேசும் ஓவியம் பாகம் 1 க்ரைம் கதை
![](https://eluthu.com/images/loading.gif)
...............................................................................................................................................................................................
அன்று ஞாயிற்றுக் கிழமை.
துப்பறியும் நிபுணனான வசந்தகுமார் வீட்டுக்குள் நுழைந்து தன் தாயார் ரத்னாவைத் தேடி மாடி அறைக்கு வந்த போது மணி இரவு எட்டு இருக்கும். (கொலையாளி மூன்றாம் கதையைப் படித்தவர்களுக்கு ரத்னா யாரென்று தெரிந்திருக்கும்.)
ரத்னா அமாவாசை இரவு வானத்தை ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தார். மொட்டை மாடியின் ஒரு பக்கம் அறையாகவும் மறு பக்கப் பாதி திறந்த வானத்தை தங்கு தடையின்றி பார்க்கும்படிக்கு மொட்டையாகவும் விடப் பட்டிருந்தது. இன்னொரு பாதியில் ரத்னாவின் கை வண்ணத்தில் செழித்திருந்தன மலர்ச் செடிகளும், பந்தல் கொடிகளும்..!
வசந்த் திரும்ப கீழிறங்கிப் போனான். ரத்னா சூடாக இட்லியும் வெங்காய சட்னியும் பண்ணியிருந்தார். அந்த ஹாட் பேக், தண்ணீர் பாட்டில், தட்டு, இட்லிப்பொடி இத்யாதிகளை ஒரு கொசுவலை மூட்டையாக கட்டி மொட்டைமாடி வரை போகும் கயிற்றின் நுனியில் தொங்கவிட்டான். கையை வீசிக் கொண்டு அப்படியே படியேறி மூட்டையை மேலே இழுத்தான். அறையிலிருந்து ஒரு இரும்புக் கட்டுமானத்தை வெளியிலெடுத்தான். அதைப் பிரிக்கப் பிரிக்க ஒரு மேஜையும் நான்கு நாற்காலிகளும் விரிந்தன. மையத்து துளையில் ஒரு தண்டைச் செருகி வண்ணக் குடையைக் கூட மாட்டலாம். அது இப்போது தேவையில்லை. நான்கு புறமும் கண்ணாடிக் குடுவைக்குள் அடைபட்ட மெழுகு திரி அமைப்பிலிருக்கும் மின் விளக்குகளை எரியவிட்டான். இனி சாப்பிட வேண்டியதுதான்.
ரத்னா ஓவியத்தை முடித்திருந்தார். வசந்த்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அத்தனை பாத்திரங்களையும் கைகளினாலே எடுத்து வந்திருக்க முடியும்; ஒரு குழந்தையைப் பெற்று கைகளில் தூக்கும் வரை இந்த பிரம்மச்சாரி பசங்களின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்ற நினைப்பு அவர் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
சாப்பிட்டு முடித்ததும்தான் வசந்த் வானத்தைப் பார்த்தான். நிலா இல்லாத வானம் அழகுதான். கருப்புக் கம்பளத்தில் ரத்தினங்களைச் சிந்தியதைப் போல் என்ன ஒரு ஜொலிப்பு!
ரத்னா உச்சி வானத்தை கை நீட்டினார். “அதோ பார்..! அதுதான் மறிமான் நட்சத்திர தொகுப்பு ! ”
வசந்த்துக்கு மறிமானையும் தெரியவில்லை; மண்ணாங்கட்டியையும் தெரியவில்லை.
வசந்த்துக்கு தொகுப்பு புரியவில்லை என்று தெரிந்து கொண்டு தனித்தனி நட்சத்திரமாக சொல்லத் தொடங்கினார் ரத்னா.
“ அதுதான் ஆதிரை நட்சத்திரம்..! இங்கிருந்து இது எவ்வளவு தொலைவு இருக்கு தெரியுமா? இது கிட்ட இருந்து புறப்படுற ஒளி உன் கண்ணுக்கு வந்து சேர தொள்ளாயிரம் வருஷங்கள் ஆகும்...! இப்ப நீ பார்க்கிறது தொள்ளாயிரம் வருஷத்துக்கு முந்தின ஆதிரையை..! நம்ம சூரியனை விட நானூத்தி ஐம்பது மடங்கு பெரிசு..! ”
வசந்த் பிரமித்தான். “இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? ”
ரத்னா சிரித்தார். “ எல்லாம் சகவாசம்தான்..! அதை விடு..! ” பேச்சை தொடர்ந்தார்.!
“ தேங்காய் கண் மாதிரி இருக்கே, மூணு நட்சத்திரம்..! அதுதான் மிருக சீரிஷம். கற்பனைக் கோடுகளை போட்டா, ஒரு மிருகத்தோட தலை கிடைக்கும்..! இது கார்த்திகைக் கூட்டம்..! எத்தனை நட்சத்திரம் இருக்குன்னு எண்ணு? ”
வசந்த் எண்ணி “ ஆறு” என்றான். “ கார்த்திகைக் கூட்டம்னா ஆறுதானே? ”
“ சாதாரண கண்களுக்கு ஆறு நட்சத்திரம் வரை தெரியலாம். அதே கூட்டத்தை கலிலியோ டெலஸ்கோப்புல பார்த்து இருபத்தைஞ்சு நட்சத்திரம் வரை கண்டு பிடிச்சிருக்கார்.. பழங்காலத்துல போர் வீர்ர்களோட பார்வைத் திறனை சோதிக்க கார்த்திகைக் கூட்டத்தை எண்ணச் சொல்வாங்க..! ”
ரத்னா தொடர்ந்தார்.
“ வசந்த்...! நாலைஞ்சு நாளா சரியா ஒன்பது பத்துக்கு அந்த துலா ராசிக்கு டூ ஓ க்ளாக் பொசிஷன்ல ஒரு இரட்டை நட்சத்திரம் உதிக்குது; பத்து நிமிஷத்துக்கு அப்புறம் மறைஞ்சு போயிடுது.. இப்ப மணி என்ன? ”
வசந்த் ஒன்பது ஆறு என்றான்.
“ பொறுத்திருந்து பாரு..! ”
மிகச் சரியாக ஒன்பது மணி பத்து நிமிடத்துக்கு கையகலக் கல் போன்று ஒரு நட்சத்திரமும் அதன் பக்கத்தில் ஜிகினாவைப் போல் பொடி நட்சத்திரமும் தோன்றியது..!
“ என்னம்மா இது? ” என்றான் வசந்த் அதிசயித்து..!
“ இது நட்சத்திரமில்ல..! நட்சத்திரம்னா ஜொலிக்கும்..! கிரகமும் இல்ல; தும்பாவிலிருந்து விடுற செயற்கைக் கோளா இருக்கலாம்..! ”
“ செயற்கைக்கோள் ஒளிருமா என்ன? ”
“ விண்வெளியில சுத்தற எதுவும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது நடக்கிற விஷயம்தானே..? ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து பூமியை பார்த்தப்ப, முப்பது பௌர்ணமி சேர்ந்த மாதிரி அவ்வளவு அழகா பூமி ஒளிருச்சாம்..! ”
இன்னும் சில பல பேச்சுக்களோடு அந்த நாள் முடிந்தது.
மறு நாள் காலை வசந்த்தை பார்க்க நாற்பது வயதைக் கடந்த இரு ஆண்கள் வந்திருந்தனர். புது கேஸ்..!
ஒருவர் பெயர் சக்ரபாணி; இன்னொருவர் நாகேந்திரன். இருவரும் அரசு வேலை புரிந்து விருப்ப ஓய்வு பெற்று இப்போது பிசினஸ் செய்து வருபவர்கள். பிரசினை என்னவெனில் இவரது இன்னொரு உயிர் நண்பரும் பிரபல கட்டட கான்ட்ராக்ட் நிறுவனருமான அதிரூபன் தமது வீட்டில் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்து விட்டார்..! போலிஸ் அதை தற்கொலையாகப் பார்க்கிறது.
“தற்கொலை செய்துக்கற அளவுக்கு அவனுக்கு கஷ்டம் ஒண்ணும் இல்ல சார்..! ” என்றார் சக்ரபாணி.
“ கடன் தொல்லை இருக்குதான். நாப்பது வயசு பிசினஸ்மேனுக்கு கடன் இல்லாம இருக்குமா? அதுக்கெல்லாம் அவன் துப்பாக்கிய தூக்க மாட்டான்..! ”- இது நாகேந்திரன்.
விவரம் இதுதான்.
நாற்பது வயது அதிரூபன் பெயருக்கு ஏற்றாற் போல் உடல் செழுமையும் பணச்செழுமையும் கொண்டவன். வாழ்க்கையை ரசித்து வாழ்பவன். தொழிலிலும் தொட்டது துலங்கியது. மனைவியை இழந்தவன். ஒரே மகன் வெளிநாட்டில் இருக்கிறான்- தகப்பன் விவகாரத்தில் தலையிடுவதில்லை.
மூன்று மாதங்களுக்கு முன் பதினெட்டே வயதான அகிலாவை மணம் செய்து கொண்டிருக்கிறான்.
நேற்றைய ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு வழக்கம் போல விடிந்திருக்கிறது. இரவு உணவை முடித்து விட்டு இரண்டாவது மாடிக்குச் சென்றிருக்கிறான். அவனுடைய இளம் மனைவி, கூட உட்கார்ந்திருந்தாளே அன்றி எதுவும் சாப்பிடவில்லை.. அவளுக்கு இரவு ஒன்பது மணிக்கு ராகா ஹோட்டலில் பார்ட்டி இருந்தது.
அதிரூபன் சாப்பிட்டு முடித்ததும் அவள் ஹோட்டலுக்கு புறப்பட்டு விட்டாளாம்.
மாடிக்கு போன அதிரூபன் இரவு வானத்தின் பின்ணணியில் ஓவியம் வரைந்திருக்கிறான்.
பிறகு இறந்திருக்கிறான்..! நெற்றிப் பொட்டில் பக்கவாட்டில் குண்டு பாய்ந்திருக்கிறது. கையில் அவனுடைய துப்பாக்கி இருந்திருக்கிறது.. வேறு கை ரேகை இல்லை. அவனுடைய மேஜை கடிகாரம் கீழே விழுந்து உடைந்து மணி ஒன்பது இருபத்திரெண்டில் நின்றிருக்கிறது.. இதுதான் நடந்தது..!
“ சார், தற்கொலை பண்ணிக்கிறவனோட நடவடிக்கை இப்படியா இருக்கும்? இயற்கையை அவன் ரசிச்சு ஓவியமா வரைவான்? எங்களுக்கு அவன் மனைவி மேலதான் சந்தேகமிருக்கு..! ஹோட்டலுக்கு போறதா போக்கு காட்டிட்டு இவ மாடி ரூம்ல மறைஞ்சு இருந்திருக்கலாம். சந்தர்ப்பம் பார்த்து சுட்டுக் கொன்னுட்டு ஹோட்டலுக்குப் போய் சாட்சிகளை உருவாக்கி இருக்கலாம்.. நீங்கதான் இந்த கேஸை துப்புத் துலக்கிக் கொடுக்கணும்..! ”
வசந்த்துக்கு அவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாகப் பட்டது.
“ நீங்க ரெண்டு பேரும் அவருக்கு எப்படி பழக்கம்? ”
மூவரும் க்ளாஸ்மேட்டுகள்.. (glass mates) - அதாவது குடிநண்பர்கள். அதிரூபன் அரசாங்கத்தால் ஏதேனும் காரியம் ஆக வேண்டி இருப்பின் இவர்களைத்தான் நாடுவானாம்.. அந்த தொடர்பு குடியால் உறுதிப்பட்டிருக்கிறது.
அதிரூபனுக்கு சக்ரபாணி நெருக்கம் போலும். அதிரூபன் வீட்டுப் பூட்டின் ஒரு சாவி சக்ரபாணி வசம் எப்போதும் இருக்குமாம். அதிரூபன் வீட்டுப் பூட்டுக்கு கள்ளச்சாவி போட முடியாதாம். திறக்கவும் பூட்டவும் கூட சாவி தேவைப்படுமாம்.
வசந்த் வெளியே வந்த சமயம் இன்னும் நான்கைந்து பேர் அவனைப் பார்க்க வந்தனர். அதிரூபன் செயலாளராய் இருக்கும் அசோசியேசனின் மெம்பர்கள். அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வசந்த்தை துப்புத் துலக்கப் பணித்தனர்.
வசந்த் இப்போது அதிரூபன் வீட்டில்..!
ஆங்காங்கே கும்பல் கும்பலாக ஜனங்கள். ஆண்களும் பெண்களுமாக வாய் விட்டு அழுது புலம்பியபடி இருந்தனர். அதிரூபனின் போட்டோ மாலையோடு மணத்தது. கிரேக்க வீரனைப் போல முகவெட்டுடன் அதிரூபன்..
வீடு ரசனையாகக் கட்டப்பட்டு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தோட்டமும் நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. வீட்டு முன்னறைக் கடிகாரம் இருபது நிமிடம் கூடுதலாக நேரம் காட்டியது.
காவலுக்கு இருந்த கான்ஸ்டபிளோடு அறையைப் பார்வையிட்டான். சக்ரபாணியும் நாகேந்திரனும் அறைக்கு வெளியே நின்றிருந்தனர்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் துப்பாக்கியால் சுட்டு மரணம் என்றது. நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்து தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முடியும்; அடுத்தவர் வந்து சுடவும் முடியும். மரணம் இரவு ஒன்பதிலிருந்து ஒன்பதரைக்குள் நடந்திருக்கலாம்...!
இன்ஸ்பெக்டர் திலீப் மேலே வந்தார்.
“ கடிகாரம் அதிரூபன் கைபட்டு நின்னுருக்கு. இவருடைய அறை கடிகாரம் இருபது நிமிஷம் ஃபாஸ்ட்டா ஓடுமாம். ஆக மரண நேரம் துல்லியமா ஒன்பது மணி இரண்டு நிமிஷம்..! ” இன்ஸ்பெக்டர் சொன்னார்.
அதிரூபன் மனைவி அகிலா பயத்துடன் நின்றிருந்தாள். கூட அவள் சித்தி. அவள் வக்கீல்தான் பேசினார்,
“ தேவையில்லாம என் கட்சிக்காரர் மேல சந்தேகப் படுறீங்க.. ! என் கட்சிக்காரர் ஒன்பதேகால் மணியில இருந்து பத்து மணி வரை ஹோட்டல் ராகாவுல பார்ட்டியில இருந்திருக்கார். அவர் கூட பார்ட்டியில இருந்த ஏழு பேர் இதுக்கு சாட்சி. பத்து மணிக்கு அவர்தான் சடலத்தை பார்த்து தகவல் தந்திருக்கார். அந்த அதிர்ச்சியிலேர்ந்து இன்னும் அவர் மீளல. நாக்குல நரம்பில்லாம அவரை குற்றவாளின்னு சொல்றீங்க..! ”
வக்கீல் சும்மா சீறு சீறென்று சீறிக் கொண்டிருந்தார்.
“ ஒன்பது மணிக்கு புருசனுக்கு சாப்பாடு வச்சிட்டு ஒன்பதேகால் மணிக்கு பார்ட்டி அட்டெண்ட் பண்ணலாம்..! ஆனா ஒன்பது மணிக்கு புருசனை கொன்னுட்டு ஒரு பெண்ணால ஒன்பதேகால் மணி பார்ட்டிக்குப் போக முடியுமாங்க? கொலைங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த துப்பாக்கியைத் தொடவே என் கட்சிக்காரருக்குக் கை நடுங்குது.. அது யாரு சக்ரபாணி? அந்த பெரிய மனுசன் கள்ளக்காதல்ங்கிறாரு..! என் கட்சிக்காரரை வேலைக்காரனோட முடிச்சு போடுறாரு...! ஆதாரமில்லாம ஒருத்தரும் என் கட்சிக்காரர் பக்கத்துல வர முடியாது..! உங்களால உண்மைக் குற்றவாளி தப்பிச்சுடப் போறான்..! ”
வசந்த்துக்கு வக்கீல் பேச்சிலும் நியாயம் தெரிந்தது. கணவனைக் கொன்று விட்டு ஒரு பயமோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் பார்ட்டி அட்டெண்ட் பண்ணவும் ஒரு ஒழுக்கங்கெட்ட முதிர்ச்சி வேண்டும். அந்த முதிர்ச்சி பதின்ம பருவத்தில் வாய்ப்பது கடினம்.
அறையை பார்த்துக் கொண்டே வந்த வசந்த் அந்த ஓவியத்தை பார்த்து நின்று விட்டான்.
இரவு வானம்தான் ஓவியமாக விரிந்திருந்தது- அவன் தாய் வரைந்ததைப் போல...!
மிருகசீரிஷ நட்சத்திரத் தொகுப்பு ஓவியத்தில் தெளிவாகத் தெரிந்தது. துலா நட்சத்திரத்துக்கு இரண்டு மணி நிலையில் இது என்ன?
இரட்டைச் சுடர்..! ! !
ஒன்பது பத்துக்கு தோன்றிய இரட்டைச்சுடர் இவர் ஓவியத்தில் இடம் பெற்றிருந்தால் இதன் அர்த்தம் என்ன?
மணி ஒன்பது பத்துக்கு இவர் உயிரோடு இருந்திருக்கிறார்..!
அந்த மேஜை கடியாரம் காட்டியிருப்பது சரியான நேரம்..! இவர் இறந்தது ஒன்பது மணி இரண்டு நிமிடத்தில் அல்ல; ஒன்பது மணி இருபத்திரெண்டு நிமிடத்தில் இறந்திருக்கிறார்..!
இதனால் அகிலா சந்தேக வளையத்தை விட்டு வெளியே வந்து விட்டாள். ஆனாலும் இதை வெளியில் காட்டிக் கொள்ள வேண்டாம்..!
ஓவியம் வரைவதற்கு சாந்தமான மனநிலை வேண்டும்..!
அதிரூபனின் அலைபேசியில் மதியத்துக்கு மேல் அழைப்புகளிலில்லை. இந்த மாடியறையிலிருந்து பார்த்தால் வானமும் கூரைகளும்தான் தெரிகிறது. அவர் மனைவியும் வெளியில் சென்று விட்டார். ஆகவே மனதைப் பிளக்கும் செய்தியோ காட்சிகளோ அவருக்கு நேரவில்லை. அறையில் நிறைய பேப்பர்களும் பேனாவும் இருக்கின்றன. ஒரு தற்கொலைக் கடிதம் கூட எழுதாமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்.
வாழ்க்கையை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்லும் ரசனை மிகுந்த அதிரூபன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை..!
இது கொலைதான். எனில் யார் செய்தது?
எப்போதும் இருபது நிமிடம் வேகமாய் ஓடும் கடியாரம் நேற்று சரியான நேரம் காட்டிய மர்மமென்ன?
தொடரும்