அன்புமிழ் கணை-அப்துல் கலாம்
*உலகமக்கள்
தங்கள் பாவங்களை கழுவியதால்
கறைபட்ட "ராமேஸ்வரம்",
புனிதனுன்னை பூவுலகிற்கு கொடுத்து
தன் பாவங்களை கழுவி கொண்டது.....
*ராமேஸ்வரம் கடற்கரையில்,
கருவாடுகளுக்கிடையே,
கிளிஞ்சல்கள் பொறுக்கிக் கொண்டிருந்த,
உன்னுடைய
கிழிந்த சொக்காய் சட்டையின் ஓட்டை வழியாகத்தான்
இந்த தேசம்
தன் விஞ்ஞானத்தின் விளிம்புகளை பார்த்தது.
*நீ நாசாவிற்கு விலைபோகி இருந்தால்,
இந்த தேசம்,
"உலக விஞ்ஞான ஓட்ட பந்தயத்திற்கான"
எல்லை கோடுகளை கூட வரையறுத்திருக்காது.
இன்றும் கூட நாசா உலகின் உச்சத்தில்.
ஆனால் இஸ்ரோ பின் நிற்கவில்லை,
முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாசாவை விரட்டி கொண்டிருக்கிறது.
அந்த விரட்டலின் வியூகம் நீ....
*பொக்ரான் அணுகுண்டு காற்றை கிழித்த போது,
அந்த சத்தம்
அமெரிக்க செவிகளை எட்டி இருந்தால்,
காற்றில் கூட “கலாம்” என்றுதான் ஒலித்திருக்கும்...
*இந்த தேசத்தின் முடி சூடியவன் நீ!!!
அதனால்தான்,
உன் வகிடெடுத்த வெண்முடி
எப்போதும் எங்களுக்கு இமயத்தை நினைவுபடுத்துகிறது
*“அணுவை பிளப்பது விஞ்ஞானம்” என்றால்,
“அன்பால் இணைவதே அஞ்ஞானம்”
என்று
அறுதியிட்டு ஆர்ப்பரித்த
ராமேஸ்வரத்து கடலலை நீ...
*இந்த தேசத்தின்
எஸ்.எல்.வி,
அக்கினி,
ப்ரித்வி ஏவுகணைகள்,
சீறி பாய்ந்த
பாதையில் படரும்,
வெண்புகை கோடுகளில்,
காலம் முழுக்க கல்வெட்டாய் "கலாம்" என்ற பெயர்
கரையாமல் நிற்கும்.....
*நீ மதங்களை கடந்தவன்,
-பிஜ்நூரில் நெற்றியில் திலகம்...
-தொழுகையில் பத்தாவது வரிசை....
-புத்தனின் பிரதியெடுத்த புன்னகை.....
-விவிலிய வசங்களின் வார்ப்பு.....
இப்படி,
நீ எங்கள் மனங்களை வென்றவன்.....
*நாங்கள் உள்ளுரில் கூட
தமிழில் பேச தயங்கி கொண்டிருந்த நேரம்,
நீ உலக அரங்கில் திருக்குறள் பேசிக்கொண்டிருந்தாய்....
*நாங்கள் கிரிக்கெட்டில்
மெய் மறந்து,
ஆடி களித்துகொண்டிருக்கையில்,
நீ உலக நாடுகளிடையே
கணியன் பூங்குன்றனாரை
நினைவு கூர்ந்து கொண்டிருந்தாய்....
*இறைவனிடம் பிரார்த்திக்கும் உதடுகளை விட,
இளைஞர்களுக்கு பாடம் சொல்லும் உதடுகள்தான்
ஒரு தேசத்தின் கனவை உரைக்கவல்லது
என்று உணர்த்தியவன் நீ....
*கீதை,
விவிலியம்,
குர்ரான்,
இவைகளை விட,
உன் கரங்கள் அதிகம் தழுவியது
பல பள்ளிகளின்/கல்லூரிகளின் கரும்பலகைகளைத்தான்....
*இந்த தேசத்தின் குழந்தைகளால்
அதிகம் நேசிக்கப்படுபவன் நீ....
-உயர் பத்ம விபூஷன் விருதையும்,
ஒரு பள்ளி குழந்தையின் புத்தகத்தையும்,
ஒன்றாய் பாவித்தாய்....
-பல டன் எடை கொண்ட ஏவுகணைகளை விட,
300-கிராம் எடை கொண்ட செயற்கைக் கால்கள்தான்
உன்னுடைய மகத்தான கண்டுபிடிப்பென்றாய்.
-கால் இல்லாத குழந்தைகளையும்,
ஓடி விளையாட சொன்ன/செய்த
எங்கள் "பாம்பன் பாரதி" நீ...
-இத்தனை பெருமைகளுக்கு உரியவனே,
இந்த தேசத்தை விட்டு எங்கே சென்றாய்?
*இன்று நாள்-30.07.15
-நெருப்பை மட்டுமல்ல,
அன்பையும் உமிழ்ந்தபடி
உலகெங்கும் சுற்றி வந்த ஏவுகணைக்கு
இறுதி பயணம்....
-தேசத்தின் எல்லா திசைகளில் இருந்தும்
மனித தலைகள்
தெற்கு நோக்கி பயணிக்கிறது.....
-கள்ளம் கபடம் இல்லா உன் முகம் பார்க்க,
ராமேஸ்வரத்து கடலலை எல்லாம் துள்ளி எழுகிறது....
-நீ பொறுக்கி விளையாடிய கிளிஞ்சகளின்
எண்ணிக்கையையும்
விம்மி நிற்கிறது மனிதர் கூட்டம்....
-அன்று கடற்கரையில் நின்று
நீ வடக்கை அண்ணார்ந்து பார்த்தாய்,
இன்று
வடக்கே உன்னை தலை நிமிர்ந்து பார்க்கிறது...
-நேற்று வரை நதியால் இணையாத
வடக்கும்,
தெற்கும்,
இன்று
உனக்காக இணைகிறது.
தெற்கு நோக்கி வடக்கே நகர்கிறது.
*உன் அக்கினி சிறகுகளை
அக்கினியால் சுட முடியாதென்பதால்,
இன்னை
இங்கு வி(பு)தைக்கிறோம்.
*உன்னை விதைத்த இடத்தில்
எழுதி வைக்க வேண்டும்,
"இந்த தேசத்திற்காக கனவு கண்ட இதயமொன்று
இங்கு துயில் கொண்டிருக்கிறது" என்று.
*மரணம் கண்டு தினம் அஞ்சும் மனிதர் கூட்டமின்று,
உன் மரணம் கண்டு சேதியொன்று அறிந்ததின்று,
அது-"மரணம் இவ்வளவு பெருமையான விஷயமா?"
- துளசி வேந்தன்