பின் நவீனத்துவத்தின் மழை
இந்தப் பொழுதிற்கென பெய்யும் மழையில்
திளைப்பதற்கும் உறைவதற்கும்
ஆரத்தழுவிய ஞாபகங்கள் எனக்கில்லை
அழுகையும் குருதியும் நீரெனப் பருகிய
கோரத்தின் மேற்குவானம் தேய்வதாயுமில்லை
கடலுக்கு திரும்பியிரா பகல் காற்று
ஓலம் தொற்றி சுழன்று கசிய
பெய்யும் மழைக்கு என்னைத் தெரியாது
குருதி தோய்ந்த கனவிற்கு மழையில்லை
சருகுகளையும் நனைப்பதில்லை
சவமென்று என்மீது வீழாத மழை
ஆகாசத்தில் அறுபட்டு உருச்சிதையும்
துயரமான கரையில்
பூத்துப்போயிருக்கும் உள்ளங்காலில்
கடல் நிறைய
பாழடைந்த வனத்தின் வேர் வெடித்து
கீழிருந்து வீசுகிறது
இருப்பின் தெறிப்பு மழை.
நன்றி - கணையாழி இதழ்