விடியலின் இசையில்

பூவுக்கு நீரூற்ற
இன்றும் வருவாய்
நீ
மென்மை பூக்க.

பனிக்காலத் தோற்றமென
வான்வெளி இறங்க
பட்டாம் பூச்சிகளின்
தேன் வாசனை தூவுகிறாய்
மொக்கு விரிக்கும் பூக்களுக்கு.

நெகிழும் விழிகளால்
காலம் கிறங்க
அசையும் காற்றில் நனையும்
இலைகளில் தெரியும்
நட்சத்திரங்கள்.

இரைச்சலற்று
நிலவும் இறுக்கம்
இரு புறமும் அசைய
சிலிர்த்தெழும்
சிறு பறவையிலிருந்து
உதிர்கிறது சிறகு.

தளும்பிக் குதிக்கும்
விடியலின் இசையில்
இரகசியமாய் விரிகிறது
சூரியனின் மடல்.

பேரமைதியின் ஆழத்தில்
நான் எப்போதும்
எழுத முடியாத கவிதை
தொடர்கிறது பயணத்தை
என்னைக் கேலி செய்தபடி.

இப்படித்தான்...
தினமும்

நீ
நீர் ஊற்றிய பின்
கலைந்து போகிறது
எனது உலகம்.

எழுதியவர் : rameshalam (3-Aug-15, 8:12 pm)
Tanglish : vidiyalin isaiyil
பார்வை : 70

மேலே