மருந்திட்டு காக்க
அவள் இடையோடு இழையோடும்
சிறு கீற்றை போல
நெடுந்தூரம் வளைந்தோடும்
ஒரு ஓடை கண்டேன் !
கண் இமை கொண்ட
கருஞ் சாந்து - என்
கன்னத்தில் படர்ந்தாற்போல்
கரு மேகம் கண்டேன் !
முகம் மோதி எனைச் சாய்க்கும்
கார்குழல் போலே !
நெல் வயலோடு விளையாடும்
பூங்காற்றைக் கண்டேன் !
செந் தேள் வீழ்ந்த
செந் தாழை இதழோ !
அவள் இதழ் தொட்ட நேரத்தில்
இடம் நோக நின்றேன் !
வாராத பிணியால் நானிங்கு
வதைபட்டு நிற்க !
வாராளோ அவளும்
பூவிதழ் கொண்டு
மருந்திட்டு காக்க !