கனவுகள் எரிந்தாலும்

சாதிகளால் கீறப்பட்ட
எங்கள் முகங்களின் இரவுக்குள்
புதைந்திருந்த கண்களைத்
தேடி எடுக்கிறது
இந்த நூற்றாண்டு.

வழிபாடுகள் தீக்கிளறிய
உராய்வுகளால் எரிந்த யுகங்களை...
காலம் கலைத்த தடங்களை
மெலிந்த கால்களினாலேயே
கடக்கத் துவங்குகிறது
இந்த நூற்றாண்டு.

கசந்த மேகம் கவிழ்ந்து
மொழியும், நதியும், இனமும்
குப்பை சுமந்த கழிவுகளாகிவிட...

அரைக் கம்பத்தில் பறக்கும்
உயிர்க் கொடிகளுக்கு
வணக்கம் செலுத்தியபடி
மீண்டு எழுகிறது மண்
இந்த நூற்றாண்டில்.

நிலவுக்காக உருட்டி வைத்திருந்த
சோற்று உருண்டைகளிலிருந்து
ஏவுகணை ஏவும் யுக்திகளை
கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது
இந்த நூற்றாண்டு.

வயல் அழிந்து...
செடிகள் அழிந்த நிலங்களில்
மரம் நடும் விதைகளை
நேற்று முதல்...
நினைவுகளில் தங்கிவிட்ட
எங்களின் மேதகு பேராசிரியர்
எங்களுக்காகப் பரிசளித்திருந்தார்.

குடியைக் கெடுக்கும் தீமையை
எதிர்த்துப் புதையுண்ட பெருமாள்கள்
எங்களின் சுவாசத்திற்காக
மீண்டெழும் ஏசுக்களாய்
எழுந்து வரக் கூடும்
இந்த நூற்றாண்டில்.

இப்படித்தான்....

எங்களின் ஆயிரம் கனவுகள்
தீயில் எரிந்தாலும்...

வளர்ந்து விரியும்
வெளியில் விழுகிறது

நம்பிக்கையின் விதை
ஒளிரும் புது வரலாறோடு.

எழுதியவர் : rameshalam (4-Aug-15, 12:02 pm)
பார்வை : 82

மேலே