கவிதை, என் காதலி

மாவடு இரண்டினைந்
துருப்பெரு மிதழ்தனில்
தேனெனுந் தமிழ்தனில்
நகையுகுத் தாய்!

சிறுஉளி சிதைக்குமா
மலையதை?! மறுக்கிறேன்,
பெருமலை மனமிதைப்
பொடித்த தடீ!

பாவிடை நூல்குழை
நானடி நீயெனை
இப்புறம் அப்புறம்
இயக்கு கின்றாய்...!

ஆவெனக் கதறவும்
ஆண்மன மிடங்கொடா,
ம்ம்மென இருக்கிறேன்,
தேள்கடி தான்!

போவென உறுமியும்,
ஈஎன சிரிக்கிறாய்,
வாளதும் தேவையோ?!
உளம்பிளந் தாய்!!

தீயடி ஒருக்கணம்!
தண்நிழல் மறுநொடி!
யாரடி!? வினவினேன்,
கவிதையென் றாய்!

~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்.

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (4-Aug-15, 6:28 pm)
பார்வை : 132

மேலே