குளத்தின் கல்லறைகள்
எங்கள் வீட்டு
சோற்று பானை
ஏமாற்றிய போதெல்லாம்
எங்களின் பசியை
நீதான் போக்கியிருக்கிறாய்
வீட்டின் வறுமை
வெளியே தெரியக்கூடாது
என்று என் தாய்
கூறிய போதெல்லாம்
உனக்குள்ளே மூழ்கித்தான்
என் கண்ணீரை கரைத்திருக்கிறேன்
கரையோர கொக்குகளுக்கும்
எங்களுக்கும் மீனை
பகிர்ந்து தந்துருக்கிறாய்.
என் தாய் மடியை
என் தம்பி
ஆக்கிரமிப்பு செய்தபோது
கரையாகிய உன் மடியில்
உறங்கித்தான்
இளைப்பாறியிருக்கிறேன்
இவ்வளவு நன்மை செய்த
உன்னை சமாதியாக்கிவிட்டு
எவ்வளவு
கல்லரைகளை உன்மீது
எழுப்பியிருக்கிறார்கள்
இந்த மனசாட்சியில்லாத மனிதர்கள்.