திருமகள் துதி - ஸ்ரீ சுக்தம்
பழவினை நீக்கும் பசும்பொன் நிறத்தாள்
தழல்பொன் இரசதம், தந்திடும் ஆரமுடை
வெண்மதி யொத்த விசதத் திருமகளை
தண்தீயின் மூத்தவா தா
பொன்னும், பரியும், பசுவுடன் கூடிய
என்சுற்றம் யாங்கள் எவர்கால் பெறுவமோ
அத்திரு யெம்மை அகலாமல் எம்முள்ளே
வைப்பாய் மறையின் முதல்
முதன்வரு குந்தம் வழிவரும் தேருடன்
மாதங்கப் பேர்பிளிறு மாட்சியின் கட்டியமாய்
வந்த திருவை விளித்தேன்- உறைக
பரிவுடன் உள்ளில் நிறைந்து
முறுவலும் காட்டி மிளிரும் குணத்தாள்
கருணை ஒளிர்ந்து களிப்பும் அளிக்கும்
முளரி நிறத்தாள், மலரமர்ச் செல்வி
அகத்துள் புகுவாய் அலர்ந்து
ஒளிநிறை திங்களை ஒத்துச் சுடராய்
தளிர்பதுமம் தாங்கிடும் தேவர் பணிந்திடும்
ஈம்மென்ற மாலுறை ஈங்கண் சரணடை
இம்மையிடர் நீக்க இறைந்து
அனலி நிறத்தாள் திருவின் தவத்தால்
வனமுதல் வில்வ விருட்சமும் தோன்றியே
அக்கனியே பேதைமை அல்லவை நீக்கி
அகப்புற இஞ்சை அகற்று
மந்தாகம் செல்வம் வளித்தலை தந்தருள்
வந்திங்கு வாழும்நின் மாக்கள் முழுக்கூறு
மங்கா புகழும் வளமையுமும் தந்திடுவாய்
எங்கும் நிறைந்த திரு
தாகம் பசியும், திருவின் தமக்கையாம்
ஏகவேணி எம்மில் இரிதலுறத் தந்தென்
அகமதில் எல்லா இருளும் அகற்றி
புகுந்து உறைவாய்த் திரு
மணமிகு, வெல்ல முடியாத் திருமகள்
வன்மை தருதிண்மை எங்கும் நிறைந்து
சகல உயிர்தனை காக்கும் திருத்தலையே
வேகமாய் வந்துள் அமர்ந்து
அகமதில் நல்லிச்சை நற்சொல்லும் வாக்கில்
வெகுவாய் நிறைதிரு வந்து அமர்ந்தருள்
காட்சிப் பொருளின் களிப்பும் உவகையும்
மாட்சி தருக திரு
கர்தமரே உம்மகள் சீதேவி எம்முள்ளே
ஆர்ந்து மகளாய் அரும்பி அருளுக
செங்கமல ஆரமணிச் செல்வியும் எம்குலம்
தங்கி வளமமும் தந்து
சிக்லீத! எம்மகமுள் சீருடன் வாழிய
ஆக்குக நீரும் அறுசுவை ஊணும்
உலகன்னை எம்குலம் ஊடி உறைந்தே
விலகாமல் வாழ வகுத்து
கருணை ஒளிர்ந்து கமலக் குளம்வீற்று
செங்கமலம் சாற்றியே செந்தூர வண்ணமாய்
ஆரமுதும் தந்து அருளும் திருவை
அருமறையோன் எம்முள்ளே ஆர்த்து
கருணைக் கனிந்து மிடுக்குடன் மாலை
செறிந்த நிறமுடன் செங்கோலும் ஏந்தி
அருணன் ஒளியுடை தங்கத் திருவை
அருமறையோன் எம்முள்ளே ஆர்த்து
பொன்னும் பொருளும் பரியும் பசுவுடன்
சேடியர் சேடர் செறிவாய் சொரியும்
திருமகள் எம்மை அகலா திருக்க
அருமறை அத்தன் அருள்