பள்ளிக்கூடம் பக்கத்தில் மதுக்கடையா

பள்ளிக்கூடம் பக்கத்தில் மதுக்கடையா?

நாளைய சமுதாயம் பயிலும் இடமது
அருகினில் மதுவை விற்பது முறையா ?
வெகுண்டெழுந்தனர் அரசியல்வாதிகள்

கமர்கட்டும் ஐசும் விற்க வேண்டிய இடத்தில்
போதை ஏற்றிடும் மதுவை விற்றிடும் கடையா
கொடி பிடித்தனர் சமூக ஆர்வலர்கள்

என் தம்பிகளும் தங்கைகளும் தடம் மாறிட கூடாது
அவர்தம் எதிர்காலத்தை சிதைத்திடும் கடைகள் கூடாது
மாணவர் அமைப்புகள் ஒன்று கூடினர்

பிஞ்சு கைகளில் மது குவலையா
பயிலும் வயதினில் போதை பழக்கமா
தமிழ் முழக்கங்கள் விண்ணை பிளந்திட

சாகும் வரை உண்ணாவிரதம்
கடையடைப்பு போராட்டம்
முயற்சிகள் அத்தனையும் செய்த பின்னர்
வெற்றி கண்டது அவர்களின் நோக்கும்

பள்ளிக்கூடம் வேறு இடம் மாற்றப்பட்டது
இனி,
மதுக்கடை பக்கத்தில் பள்ளிக்கூடம் இல்லை...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (6-Aug-15, 12:16 am)
பார்வை : 1226

மேலே