மதப்பேரூந்துகளில் கடவுள்

கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டக்
கடவுளை கட்டுப்படுத்த
மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்துகளாய்
மண்ணில் ஓடுகின்றது சில மதங்கள்

சொகுசு பேரூந்துகளாய்
மிக அழகாய் சௌகர்யமாகவும்
குளிரூட்டப்பட்டதுமான
உயர் ரக பிரயாணத்துக்கான
உத்தரவாதங்களோடு
ஓடிக்கொண்டிருக்கிறது சில மதங்கள்

யாரும் எங்கேயும் எப்போதும்
தங்கள் பயணத்தை
எந்தவித கட்டுப்பாடுக்களுமின்றித்
தொடர்வதற்கு ஏதுவாயும்
குறைந்த செலவில் அதிக நன்மை
என்பதற்கமைய கைகாட்டும்போது
நிறுத்துவதற்கும்
தேவையான இடத்தில்
இறங்கிக் கொள்ளும் வசதியிலான
அரச, தனியார் பேரூந்துகளாயும்
அகிலத்தில் சில மதங்கள்


சுற்றுலாத தளங்களின்
அருமைகளையும் பெருமைகளையும்
எடுத்துரைத்து பயணிகளை
ஈர்த்தெடுத்து அழைத்துச்செல்லும்
உல்லாச பேரூந்தாய் ஆங்காங்கே
சில மதங்கள்

அவரவர் வசதிக்கேற்ற
வாகனங்களாய் தனிப்பட்ட
சிலமதங்களும் கூட

பேரூந்துகளின் நடத்துனரைப்போல
எல்லா மதங்களின் வாசற்படிகளிலும்
சில வழிகாட்டிகள் போதகர்களாய்..

ஓடிக்கொண்டிருக்கும்
மதப்பேரூந்துகளில்
கடவுள் பயணித்ததிற்கான
ஆதாரங்கள் இல்லாதபோதும்
ஏதோ நம்பிக்கைகளில் அவை
ஓடிக்கொண்டுதானிருக்கின்றன
நம்பிக்கையை கடவுளாய் நம்பியபடி.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Aug-15, 3:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 54

மேலே