பிரதி எடுக்க முடியா பிம்பங்கள் - 5

ஒரு மாலை பொழுதில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்த அவன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்?

காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றேன்...

காற்றை உன்னால் வாங்க முடியாது
காற்றுதான் உன்னை வாங்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்கையின் வரவு செலவுகளை
உனது சுவாசத்தின் வழியே
சரி பார்த்துக் கொண்டிருக்கிறது...

காற்று எப்போதும்
உன் கையில் சிக்குவதில்லை என்றான்...

ஏ பித்தனே...
நான் நினைத்தால் ஒரு பலூனில் அடைத்து
எனது கைக்குள் கைதியாக்கி விடுவேன் என்றேன்...

வெடித்து விடுதலையடைவது
எப்படி என்று காற்றுக்கு தெரியும்

கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும்
காற்றுக்கு எல்லாம் தெரியும் என்றான்,...

ஏ முட்டாளே...
நான் எவ்வளவு கற்று தெரிந்திருக்கிறேன்
என்னை விட காற்றுக்கு என்ன தெரிந்து விடும் என்றேன்...

உனது கடைசி நொடி
காற்றுக்கு மட்டும்தான் தெரியும் என்றான்...

எனது கடைசி மூச்சு
கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்
காற்றுக்கு அல்ல என்றேன் ஏளனமாக...

கடவுளை நம்பாத நாத்திகன் கூட
காற்று இல்லாமல் வாழ முடியாது என்பதை
நம்பித்தான் ஆக வேண்டும்...

ஒவ்வொரு நாளும்
உறங்கி விழித்தவுடன் - நீ
உயிருடன் இருக்கிறாய் என்று
உனக்கு உணர்த்துவதே காற்றுதான்...

நீ மண்ணை விட்டு பிரிவதே
காற்று உன்னை விட்டு பிரிவதுதான்...

காற்றின் மொழியை நீ அறிந்திருக்கவில்லை
அதை வெறும் சப்தம் என்பாய் நீ
அதை சப்தஸ்வரங்கள் என்பேன் நான்...

காற்றின் சக்தியை நீ அறிந்திருக்கவில்லை
புயலாக மட்டுமே பார்த்து வெறுக்கிறாய் நீ
ஆனால்
மூழ்கிக் கொண்டிருக்கும் மீனுக்கும்
மூடிக் கொண்டிருக்கும் முட்டைக்குள்ளும்
ஒரு உயிர் வாழ ஊடுருவிச் செல்லும்
காற்றைக் கண்டு வியக்கிறேன் நான்...

காற்று வருவது போவதிலும்தான்
வாழ்கையே இருக்கிறது...
வருவது என்பது உனது பிறப்பு
போவது என்பது உனது இறப்பு..

********************* ஜின்னா *********************

அவன் இன்னும் சொல்வான்... (தொடரும்...)

எழுதியவர் : ஜின்னா (9-Aug-15, 1:08 pm)
பார்வை : 437

மேலே