காலத்தின் வசமாகிய கலாம்

கக்கனும் காமராசனும் வாழ்ந்த தமிழகத்தில் நான் இல்லையே என்ற வருத்தம் என்னுள் எழும்போதெல்லாம்
கலாம் வாழ்ந்த தமிழ்மண்ணில் நான் இருந்தேன் என ரோமங்கள் சிலிர்க்க பூரித்துக் கொள்வேன்

அவருக்கு இரங்கற்பா எழுத பேனாவை
எடுத்த போது அது தலைகுனிந்து என்னையும் மீறித் தன் கருநீல கண்ணீரால் கவிதாஞ்சலி நிகழ்த்திக் கொண்டிருந்தது

கலங்கிய கண்களால் கலாமின் புகைப்படத்தை கலங்கிய பிம்பமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது
"மண்ணில் பிறந்த அனைவரும் மரணிக்கத்தானே போகிறோம்" என்று கூறி குழந்தைச்சிரிப்பு சிரித்த அந்ந ரத்தினத்தை எண்ணி ஆற்ற இயலாத் துக்கம் தொண்டையை அடைக்கிறது

முகமதியக் கலாமை யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்

ஏனென்றால் திலகமிட்ட கலாமை பார்த்த நாம் தலையிலே வெண் குல்லாவோடு படமாய் கூட பார்த்ததில்லையே

வங்கியில்தான் இருப்பு ஏதும் இல்லை
ஆனால் லட்ச்சக்கணக்காண இளைஞர்கள் இருப்பு வைத்திருந்த கண்ணீரை வட்டியோடு பெற்று செல்கிறாரே

பிள்ளைகள் இல்லையே என்று கலாம் நினைத்திருந்தால் இன்று அழுதுகொண்டே பிறக்கும் குழந்தைகளையும் சேர்த்து அவருக்காக கண்ணீர் விட்டவர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்

நாட்டையே மூச்சாய் சுவாசித்த மகான் இன்று மூச்சின்றி இருக்கும் போது நாட்டுக்கே நாசித்துவாரம் அடைத்தாலும் ஆச்சரியம் இல்லை

தண்ணீருக்கு நடுவே பிறந்த மகான் இன்று கோடிக்கணக்கானோர் கண்ணீருக்கு நடுவே விடைபெற்றுக்கொண்டார்

நாட்டுக்காகவே உழைத்துக்கலைத்த நல்ளுள்ளம் நீண்ட நெடும் ஓய்வெடுக்க விண்ணுலகம் சென்றுவிட்டது..

அக்னியும் பிருத்திவியும் பொக்ரானும்
இந்தியாவின் சாதனையாக நாம் நினைக்கும் போதெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் கலாமின் இதயம் ஒருகணம் துடித்தாலும் துடிக்கும்

இந்தியா வல்லரசாய் வளர்ச்சியுற்றால் கல்லறையை உடைத்து எழுந்து ஒருமுறை ரசித்தாலும் ரசிக்கும்.............

எழுதியவர் : கார்த்திக்கண்ணன்.பா (11-Aug-15, 9:09 pm)
பார்வை : 49

மேலே