பிறக்கலாம் அப்துல்கலாம்
அப்துல்கலாம் பிறந்தநாள் !
[15-10-2015]
கடற்கரை மணலில் மலர்ந்த மலரே ..!
கவிதைத் தணலில் உலர்ந்த தளிரே..!
காந்தியடிகளுக்குப் பிறகு
நாட்டை வழிநடத்திய
கலாம் அடிகளாரே..!
மலர்கள் மட்டும்
இல்லையென்றால்
மனிதர்கள்
பைத்தியக் காரர்கள்
ஆகிவிடுவார்கள் என்று
சொல்லிவிட்டு-பல
மலர்கொத்துகளுக்கு நடுவில்
நீயுமொரு
மலராகிப் போனீரே..!
அக்னிச் சிறகே..!
அறிவுச் சுடரே..!
அறிவியலோடு
தமிழையும் அல்லவா
வானிற்கு வழங்கியிருக்கிறாய்..!
நாட்டில் நல்லறம்
மேலோங்க
இல்லறத்தைத்
தியாகம் செய்த இனியவரே..!
இந்தியா
வல்லரசாவதை
விண்ணிலிருந்து
ரசிப்பதற்காகவா
சென்றுவிட்டாய்?
உலகையே
இந்தியாவின் பக்கம்
தலைதிரும்ப வைத்துவிட்டு
தலைசாய்ந்து போனீரே..!
ஒரு விழாவில்
விளக்கேற்றுவதற்காக
மெழுகுவர்த்தி
ஏந்தி நின்று
சமத்துவம்
கற்பித்த ஏவுகணையே..!
நீ
மண்ணில் வாழும்போதே
உனது புகழ்
விண்ணில்
விளைந்துவிட்டதல்லவா..!
என்னில்
நிறைந்திருக்கும்
கலாமே..!
இந்தியப் பெண்களின்
கண்களிலும் அல்லவா
கனவுத்தீ
மூட்டி இருக்கிறாய்..!
எளிமையில் முளைத்த
வலிமையே..!
உன்
கண்களின் கோட்டைக்குள் தான்
எத்தனை எத்தனை
மாணவக் கனவுகள்...!
எங்களைக்
கனவுகாணச் சொல்லிவிட்டு
கண்மூடிப் போனீரே..!
இனிமேல்
எங்கள் கனவுகளில்
நீயல்லவா
நிரந்தரம்..!
ஒருவேளை
விண்மீன்களை
கனவுகாணச் சொல்வதற்காக
சென்றுவிட்டாயோ..!
விண்ணில் விளையாடச்
சென்றுவிட்ட
விண்கல(லா)மே..!
நீ
காற்றோடு
காற்றாக
கலந்திருக் கலாம்..!
மண்ணோடு
மண்ணாக
மாறியிருக் கலாம்..!
கடலோடு
கடலாக
கலந்திருக்கலாம்..!
மலரின்
மடியில்கூட
நீ
அமர்ந்திருக் கலாம்..!
மரங்களின்
தலையில் கூட
தழைந்திருக் கலாம்..!
மாணிக்கத்தின் மின்னலில் கூட
மறைந்திருக் கலாம்..!
ஜன்னலோர மின்னலோடு கூட
பின்னியிருக் கலாம்..!
ஏன்?
இலைகளின் நரம்புகளில் கூட
நீ
இருக் கலாம்..!
அலைகளின்
இசைகளோடு கூட
ஓடியிருக் கலாம்..!
மலைகளின்
பள்ளத்தில் கூட
நீ
தவழ்ந்து கொண்டிருக்கலாம்..!
அங்கிருக்கும்
அருவியின் அழகில் கூட
நீ
ஒளி(ர்)ந்திருக் கலாம்..!
குருவியின்
அலகில்கூட
நீ
அழகாய்
இருக் கலாம்..!
ஏவுகணைக் கருவியின்
மூக்கில் கூட -நீ
முளைத்திருக் கலாம் ..!
கலாம்...!
கலாம்...!
கலாம்...!
அப்துல் கலாம்..!
மாணவர்களின்
இதயத்துடிப்பை
இந்தியாவிற்காக
துடிக்கவைத்துவிட்டு
போதிமரமானாய்..!
தவழ்ந்து கொண்டிருக்கும்
மழலை
எழுந்து
நடைபயிலும்போது
தட்டிவிட்டு
விழுந்து............
மீண்டும்
எழுந்து
நடக்க முயற்சிக்கும் .....
நடக்க முயற்சிக்கும்....
தன்னம்பிக்கையில்
ஒருவனாகப் பிறக்கலாம்
இன்னும் பல
அப்துல் கலாம்..!
-திருமூர்த்தி,
முதுகலை முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்,
பாரதிதாசன் கலை & அறிவியல் கல்லூரி,
எல்லீஸ்பேட்டை,
ஈரோடு.
.................................................................................................................................................