ஆளற்ற வெளி

இடையுறாது
தாக்கிக் கொண்டிருந்தன
சம்மட்டிகள்.
மரணத்தின்
பூக்களை வானம்
தூவிக் கொண்டிருந்தது.
ஆண்டாண்டு காலமாய்
அவர்கள் அழகாகக்
கட்டியெழுப்பிய
அந்த அரண்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொத்தர்கள்
கைவசம் ஆனது..
அழகான கோடை
அன்றுதான்
துருப் பிடிக்கத் தொடங்கியது
தெளிந்த நீர் ஏரி
தீப்பட்டு எரிந்து
கொண்டே இருந்தது.
அணைப்பதற்கு அன்று
அங்கு யாரும்இருக்கவில்லை.
எரிந்து முடிந்த
சாம்பல் குவியலில்
எப்போதும் பாடும் அந்தப்
பறவையின்
இறகுகள் மட்டும் எரியாமல்
எங்கோ சிதறிக் கிடந்தன.
இப்போது அந்த
வெளிகளின் கதவுகள்
மூடியே கிடக்கின்றன.
யாரோ தம் நிழல்களுடன்
பேசும் ஒலிகள் ..
மட்டும் எதிரொலிக்கின்றன
யாருமே அங்கு
பேசுவதற்கு அஞ்சுகின்றனர்.
கொத்தர்கள் இட்ட
எலும்புத் துண்டுகளுடன் வாழும்
சில நாய்கள் மட்டும் உரக்க
ஊளை இட்டுக் கொண்டிருக்கின்றன...

எழுதியவர் : உமை (15-Aug-15, 8:20 pm)
Tanglish : AALATRA veLi
பார்வை : 62

மேலே