காற்றி னிலேநின் கீதமிசைக்குதடா -கார்த்திகா

எங்கே செல்கிறாய் என்கிறேன்
செல்லமாய் தலை கலைத்து
உயரப் போகிறாய்
எங்கும் இருப்பதனால்
விழிகளுக்கு அகப்படாமல்
விரல்களைத் தீண்டி
வர்ணம் பூசுகிறாய் நீ
வெள்ளைப் பூக்கள்
எங்கெங்கும்....
மலரின் இதழடுக்குகளை
கலைக்கிறாய் கை தொட
நினைக்கையில் தும்பியின்
மேலேறிப் பறக்கிறாய்
உன்னை ஈன்றது
மரங்களா மலர்களா
இல்லை இலைகள் என்கிறேன்
என் மூச்சில் நுழைந்து
சுவாசத்தை வருடுகிறாய்
கனவெல்லாம்
பனித்துளிகள் நனைக்க
சொட்டும் மழைத்துளிகளின்
அணைப்பினில் காதோடு
நீ பேச வேண்டும்
என் காதல் காற்றே!!