நல்ல பெண்மணி

ஒரு பெண்ணை நம்பி
நீ எதைக் கொடுத்தாலும், அதைச்
சிறப்பாக்குவாள்;

நீங்கள் குடிபோகும் வீட்டைக்
கொடுத்துப்பார்;
அதை ஒரு இனிய மாளிகையாக
அழகுபடுத்துவாள்;

மளிகைப் பொருட்கள் வாங்கிக்
கொடுத்துப்பார்;
உனக்கு ஒரு இனிய
விருந்தளிப்பாள்;

அவளிடம்
புன்னகைத்துப் பார்;
அவள் தன் இதயத்தையே
பரிசாகத் தருவாள் உனக்கு;

அவள் ஒரு நல்ல பெண்மணி,
அவளே உன் இனிய மனைவி,
அவளே உன் வாழ்க்கை
வளம் பெற ஏற்றமிகு தேவதை!!

நல்ல பெண்மணி

ஒருபெண் ணைநம்பி எதைக்கொடுத் திடினுமே
கருத்தாய் அதைச்சிறப் பாக்குவாள்; நீங்கள்
குடிபோ கும்வீட்டைக் கொடுத்துப்பார்; என்றும்
வடிவா யொருமா ளிகையாக் குவாளே! 1

ஒருபெண்ணை நம்பியே எதைக்கொடுத் தாலும்
கருத்தாய்ச் சிறப்பாக் கிடுவாள்; நீங்கள்
குடிபோ கும்வீட்டைக் கொடுத்துப் பாரென்றும்
வடிவாய தைஒருமா ளிகையாக் குவாளே! 2

ஒருபெண் ணைநம்பி பொறுப்பாய் மளிகைப்
பொருட்கள் வாங்கிக் கொடுத்துப் பார்நீ;
இனிதாய் சுவையாய் என்றும் விருப்புடன்
உனக்கொரு இனிய விருந்தளிப் பாளவளே; 3

ஒருபெண்ணை நம்பி அவளிடம் புன்னகைத்
துப்பா(ர்); அவள்தன் இதயத் தையே
பரிசா கத்தருவாள் உனக்கு; அவள்ஒரு
கரிசன முள்ள நல்லபெண் மணியே! 4

ஒருபெண்ணை நம்பி அவளிடம் புன்னகைத்
துப்பா(ர்); இதயத் தைப்பரி சாய்த்தரும்
அவளே உந்தன் இனிய மனைவி,
அவளுன் வாழ்க்கைக்(கு) ஏற்றமிகு தேவதையே!! 5

பல விகற்ப இன்னிசை வெண்பா

ஒருபெண்ணை நம்பி எதைக்கொடுத் தாலும்,
கருத்தாய தைச்சிறப் பாக்குவாள்; நீங்கள்
குடிபோகும் வீட்டையே இன்பமாளி கையாய்
வடிவாக்கு வாளேநீ காண்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Aug-15, 12:18 pm)
பார்வை : 162

மேலே