அந்த நாட்கள்
திரும்ப வருமா அந்த
இனிய நாட்கள் !
கவலைகள் ஏதுமின்றி
காற்றைப் போல
சுற்றித்திரிந்த அந்த
கனவு நாட்கள் !
விலைவாசி ஏறினாலும்
குறையாது விளையாட்டு !
வயிற்றுக்கே இல்லையாயினும்
வறுமை தெரியாது !
கட்டில் எதற்கு
கட்டாந்தரை தொட்டில் இருக்க !
எண்ணச் சிதைவில்லை
ஏமாற்றத் தேவையில்லை !
வண்ணமாய் உடுத்தினோம்
உண்ணாமல் சுகங்கண்டோம் !
வாழ்க்கை வாழ்வதற்கே என்று
வாழ்ந்து தீர்த்து விட்டோம் !
இறந்து போன நாட்களின்
கனவுகளாய் மாறின எல்லாமே !
இளஞ்சூரியன் உச்சிக்கு வந்து
சுட்டது போலானது எல்லாம் !
அந்தக்காலம் இறந்து போனது
மிஞ்சியது நிழலான நினைவுகளே !
நிகழ்காலத்தை விட இறந்தகாலம்
இனிமையானது தான் !
ஏனென்றால் அது திரும்பி
வராதது என்பதாலோ !
திரும்ப வருமா அந்த
இனிய நாட்கள் !