கனவுக்கான சாத்தியங்கள்

என் வீட்டு முற்றத்தின்
இடது மூலையில் அமைக்கப்பட்டுள்ள
எடை இயந்திரம் வழியாக மட்டுமே
என் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுமதிக்கிறேன்.
வகுப்புவாரியாக அனுமதிக்கப்பட்ட
அல்லது வயது வாரியாக சுமக்க,
உகந்த எடை என்று
எதுவும் நிர்ணயிக்காத நிலையில்
எடையளவு மட்டும் குறித்துக் கொள்கிறேன்
அவர்களுக்கான அறிவு எதனையும்
கற்றுத் தராமல்
எந்த நேரத்திலும்
தையல் நூல்களை அறுத்துக்கொண்டு
பையிலிருந்து வெளியேறும் முனைப்பிலேயே
இருக்கின்றன புத்தகங்கள்,
புத்தகப்பை அறுந்து விடாமலும்
கால்கள் இடறிவிடாமலும்
வகுப்பையும்... வீட்டையும் அடைந்து விடும்
குழந்தைகளின் தன்முனைப்பையும் மீறி,
அவர்கள் கனவுகள் காண்பதற்கான சாத்தியங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
