முட்டுக்கொம்புகள்
சமீபத்தில் நண்பரின் புதிய வீட்டின் குடிபுகு விழாவுக்கு சென்றிந்தேன். நண்பரின் உறவினர் ஒருவர், நண்பரிடம் 'ஏன் என் மகளையும் மருமகனையும் இந்த விழாவுக்கு அழைக்கவில்லை' எனக்கேட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தார். நண்பருக்கு அவர் இருந்த அலைச்சலில் என்ன சொல்வது என்றே தெரியாமல் கொஞ்சம் அமைதியாகவே அவரை சமாதானப்படுத்தினார். ஆனாலும் அவர் அடங்காமல் மனைவியை அழைத்துக்கொண்டு விழா முடியும் முன்னே புறப்பட்டு விட்டார். நான் வீட்டை சுற்றி பார்க்கும்போது கவனித்தேன். இத்தனை நாட்களாய் வீட்டை தாங்கிய முட்டுக்கொம்புகள் வீட்டின் பின்புறம் மறைவாக போடப்பட்டிருந்தன. எங்கிருந்தோ வந்த வாழை மரங்கள் இரண்டு வீட்டின் முன்னே கட்டப்பட்டிருந்தன. வீட்டைக்கட்டிய கொத்தனாரும் கட்டுமான பணியாளர்களும் சுற்றுச்சுவற்றுக்கு வெளியே தங்களுக்கு வழங்கப்படவிருக்கும் அன்பளிப்புக்காக காத்திருந்தனர். இவற்றை என் நண்பரிடம் சொல்லி அவரை சற்று சமாதானப்படுத்தினேன். அவர் 'உண்மை நண்பரே, இதோ உள்ளே இருக்கும் யாருமே எனக்கு எந்த உதவியும் செய்ததில்லை. ஒரு செங்கல்லை கூட எடுத்து தராத சொந்தங்கள் தான் இன்று சீர் செய்யவும் என்னிடம் சீர் பெறவும் வந்திருப்பவர்கள்' என மிகவும் நொந்து கொண்டார். ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு வரும்போது வாழ்த்த மட்டும் செய்யுங்கள். குறைகளை பின்னால் கூறுங்கள் சொந்தங்களே.