கிராமத்து வாசல் -ரகு
காற்றின் முகவரி ஏந்திநிற்கும்
தென்னங்கீற்றில்
உட்கார்ந்து உட்கார்ந்து
ஊஞ்சலாடும் பறவைகள்
கீற்றின் நிழற் கோடுகள்
தரை மொழுகும் கவிதைகளாய்
ஒரு வாழை ஒரு கொய்யா
பூக்களடர்ந்த முருங்கை
பந்தங்களெனப் பக்கத்தில்
படர்ந்த அவரைப் பந்தலுக்குள்
காதல் ரகசியமேவும் சிட்டுக்கள்
வண்ணத்துப் பூச்சிகளுக்குச்
சளைத்திராத வாடாமல்லி
மரமல்லிக்குள் மண்பறிக்கும்
கோழியின் கால்களினூடே
குதூகலிக்கும் குஞ்சுகள்
கூடை களைந்தோடும் குட்டி ஆடுகள்
எப்போதும் அந்த வாசலுக்குத்
திருவிழாக் கோலம்தான்
இப்போதும் ஊர்த்திருவிழாவெனெ
நண்பனின் கிராமத்துத் தாத்தா
அழைப்பு விடுக்கிறார்
தொலையாத அந்தக் கனவுக்காகவே
இன்னொரு வாசல்
சிருஷ்டித்துவிட நல்ல கிராமம்
அவசியப் படுகிறது
மாப்பிள்ளைக் கோலத்தில்
கிளம்பிய எனக்குப் பார்த்தவுடன்
பிடித்துவிடவேண்டும் அந்தக்
கிராமத்துப் பெண்ணை....!