தொப்பை வளர்ப்பது எப்படி
"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள்.
"பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர்.
"தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன்.
"அப்படியானால் நம் பத்திரிகைக்குத் "தினப் புளுகு" என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு.
"பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு.
அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், "தினப் புளுகு" நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர்.
இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான்.
அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான்.
"திருடுவதற்காக இருக்கும்" என்றான் மடையன்.
"ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?" என்று சந்தேகம் கொண்டான், மட்டி.
"எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்" என்று விளக்கினான், மடையன்
"அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!" என்றான் மட்டி.
மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள்.
வேலியே பயிரை மேய்கிறது!
பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!!
இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார்.
இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள்.
"தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்" என்றான் மண்டு.
"மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்" என்று கத்தினான் மூடன்.
உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள்.
அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா!
அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார்.
ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன?
இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு!
இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள்.
"நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!" என்றான் முட்டாள்.
"என்ன எழுதுவது?" எனக் கேட்டான் மூடன்.
சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள்.
"மண்ணில் புரளுவது எப்படி?" என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி!
"தொப்பை வளர்ப்பது எப்படி?" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை "அறிவியல்" பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.
"பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! "தத்துவத் தந்தை" பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!"
இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர்.
எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்" என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார்.
பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள்.
"தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!" என்று கத்தினான் முட்டாள்.
சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் "குற்றப்பத்திரிகை" வாசிக்கப்பட்டது.
"பரமார்த்தரோ, "இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; "தினப் புளுகு" என்று தானே போட்டிருக்கிறோம்" என்று கூறினார்.
அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.