காதல், நல்லவர்களை கெட்டவர்களாக

குடித்து கூத்தடித்து
கூத்தியாளுடன் கும்மாளமிட்டு
கூலிக்கு கொலை செய்து
காசுக்கு கற்பழித்து
வீட்டில் உதவாக்கரையாகவும்
வீதியில் ரவுடியாகவும்,
பகுதி வாழ்வை கடந்த பின்,
ஒரு அழகான பிகரும்
திருந்த ஒரு வாய்ப்பும்
கிடைத்துவிட்டால்..
அவர் தான் ஹீரோ.
தமிழ் சினிமா இலக்கணங்களில்
இதுவுமொன்று.
....
காசே குறியென்று
கஷ்டப்பட்டு சம்பாதித்து
தோப்பு தொறவு வாங்கி
கூலியாட்களை கிடுக்கிபிடி போட்டு
வேலை வாங்கி
[குறைந்த பட்சம் இவர் மூலம் வேலைவாய்ப்பாவது கிடைக்கிறது]
கழுத்தில கொட்டை
நெத்தியில பட்டை என
ஆன்மீக வாசம் வீச
சேர்த்த சொத்தையெல்லாம்
தன் செல்ல மகளுக்கு
செய்ய வேண்டுமென்ற ஆசையோடு
அப்பாக்காரர் மாப்பிள்ளை தேடும்போது..
இடையில் புகுந்து
லவட்டிக்கொண்டு போகும் ஹீரோவை
கொலை வெறியோடு
துரத்த தொடங்கினால்..
அவர் தான் வில்லன்.
தமிழ் சினிமா இலக்கணங்களில்
இதுவுமுண்டு.
தெரிந்தோ தெரியாமலோ
இம்மாதிரியான படங்கள்
நமக்கு
சொல்லாமல் சொல்கின்ற
செய்தி..
காதல்,
நல்லவர்களை கெட்டவர்களாகவும்
கெட்டவர்களை நல்லவர்களாகவும்
ஆக்கும் என்பதே.

எழுதியவர் : முகநூல் : செந்தில் குமாரன் (6-Sep-15, 11:26 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 155

மேலே