இறுதி உயிரின் உயில்
விண்மீன்கள்
பிடுங்கி
துவைத்து
சாறு பிழிந்து
ஊற்றி ரசித்தோம்
நம் பிரியத்தில்....
மெழுகின் ஒளியை
கொன்ற
தென்றலில்
இரண்டு தேகமும்
இணைத்து
நனைத்தோம்!!
உயிர் வாயு
உள் நிறப்பும்
இரு பையில்
தளம் தட்டி
நின்ற காதலில்
முத்தமிட்டு
மோகம் கலந்தோம்!!
கொழுத்திய
இராவின்
சாம்பலில்
கிளறிக்கொண்டோம்
என்னையும்
உன்னையும்!
காமத்துக்கப்பால்
அறத்துப்பால்
அருந்தி வளர்த்தோம்
நம் வாழ்வை!!
தேக
சுருக்கில்
மறைந்து கிடந்த
மரணம் கண்டு!!
என் முன் நீயோ
உனக்கு முன்
நானோ
இறப்பதில்லையென
சபதம் கொண்டோம்!!
மரணமே!!
வயோதிபத்தின்
இரும்புக்கதவு
திறக்கும் இலவச
காவலாளியே!!
என்வசம்
நீ இருந்த
போதும்
ஏன் மறந்தாய்!!
என் மனைவியை
கொன்றபோதும்
எனை கொல்ல!!
அனுபவ
கோலூன்றி
ரசித்து குடித்தோம்
அன்பே நம்
யவ்வன காலத்தை!
இனிமேலும்
தனிமையில்
இங்கிருத்தல்
ஒவ்வாது
உன்னிடமே
வருகின்றேன்!!
இப்படிக்கு
உன் அருகாமை
ஏங்கும்
அன்பாளன்.
இலை செத்த
கத்தரி தோட்டத்துக்கு
விசுக்க வாங்கிய
விசப்புட்டிலருகில்!
எழுபது வயதில்
இறந்த கிழவனும்
எழுதிவைத்த இந்த
நாட்குறிப்பும்..