ஆகையால் அவளே சிறந்தவள்

குளித்து முடித்ததும்
அரைகுறையாய் துவட்டிவிட்டு
அவளிடம் வந்தேன்.
உடுத்திய சேலையால்
என்னை துடைத்து உலர்த்தினாள்.

அவள் தந்த ஆடையை
அணிந்து கொண்டேன்.
சமயலறையில் மாவு ஊற்றி
சங்கீதம் சுட்டாள்.

அறைக்குள் சென்றேன்.
வெளியே வந்தாள்.
பார்த்தே இடித்தேன்.
பார்க்காமல் மோதினாள்.
என் நெஞ்சை தொட்டாள்.
அவள் நெற்றியை தொட்டேன்.
நானோ தேய்த்தேன்.
அவளோ தடவினாள்.
இருவரும் மருந்தில்லாமல்
வலி நிவாரணம் செய்து கொண்டோம்.
பிறகு மெல்ல நகைத்தாள்.
மீண்டும் நனைந்தேன்.

காலை உணவுக்கு
தோசை தந்தாள்.
சத்துணவுக்கு
முத்தம் கேட்டேன்.
அதையும் அவசரமாய்த் தந்தாள்.

மேல்ச்சட்டையை
கீழ்ச்ச்சட்டைக்குள் நுழைத்து,
முன்புறம் சரிசெய்தேன்.
அவள் பின்புறம் சரிசெய்தாள்.
இரவில்
என்மீது தேனெடுக்கத் தெரிந்த
பட்டாம்பூச்சிக்கு இப்போது
தேகத்தில் தெருக்கூட்டவும்
தெரியுமென்பதை உணர்ந்தேன்.

காலுறை அணிந்தேன்.
அவள் கைபட்டு காலணி
மின்னுவது அறியாமல்,
கருப்புச் சாயமிட்டாள்.

கையசைத்து விடைபெற்றேன்.
கதவிழுத்து வீடடைத்தாள்.

வேலைக்குப்போக
சாலைக்கு வந்தேன்.
அங்கே வேலை இல்லாதோரின்
சாலை மறியல்.
வெள்ளை வேட்டியின்
விளம்பரங்கள்.
தேர்தல் நெருங்குவதை
தெரிந்து கொண்டேன்.
திரும்பி வீடு வந்தேன்.

அங்கே அவனோடு அவள்!
அவனோ நிர்வாணத்தோடு!
அவளோ நீரோடு.....
அவன் அடம்பிடித்தான்.
அவள் அரவணைத்தாள்.

எனக்கு செய்த சேவையை
அவனுக்கும் செய்தாள்.
இடையிடையே நான் கேட்டு
வாங்கிய முத்தத்தை
அவனுக்கு கேட்காமலே தந்தாள்.

இறுதியில்
அவன் பையை நிரப்பிவிட்டு
அந்தப் பொதியை
என் கையில் தந்தாள்.
நானும் அவனும்
நடந்து போனோம்.

அழைத்து போகையில்
அறிந்து கொண்டேன்.
வேலையை விட
பள்ளி செல்வது கடினமென்று.
"ஆகையால் அவளே சிறந்தவள்".....

எழுதியவர் : தீனா (8-Sep-15, 8:29 pm)
பார்வை : 142

மேலே