அமுதாய்க்கவி பிறக்கும்
மலைமேனியில் முகில்தூங்கிடும் வனப்பில்மனம் குதிக்கும் !
அலையாடிடும் தரங்கந்தனில் அழகாய்நுரை மிதக்கும் !
இலைமேல்பனி உருண்டோடிட இயலாமலுந் தவிக்கும் !
கலைகொஞ்சிடும் எழிற்சிற்பமும் கனிவாய்விழி திறக்கும் !
நதிபாய்கையில் கரைநாணலும் நனிவீசிடக் குளிரும் !
மதிதாரகை புடைசூழ்ந்திட வலம்வந்தது களிக்கும் !
புதிதாய்வளி வருடிச்செல பொலிவாயுளம் சிரிக்கும் !
அதியற்புதம் விழிகாண்கையில் அமுதாய்க்கவி பிறக்கும் !
( இது அதிகரீணி வகையிலான கலி விருத்தம் )
புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமாங்கனி + புளிமா