நாட்டியத்தான் தந்த மகன்
![](https://eluthu.com/images/loading.gif)
கொம்பெடுத்த நாட்டானை கோட்டெழுத்தைத் தந்தவனை
நம்புகவி நாயகனை பாட்டெழுத வந்திடுவான்
காட்டா வமுதகுடம் காட்டிடுவான் தந்திமுகன்
நாட்டியத்தான் தந்த மகன்-1
இதே பாடலை ஈற்றுச் சீரை முதற்சீராக்க
தந்தமகன்!கொம்பெடுத்த நாட்டானை! கோட்டெழுத்தைத்
தந்தவனை நம்பு!கவி நாயகனை பாட்டெழுத
வந்திடுவான்! காட்டா வமுதகுடம் காட்டிடுவான்
தந்திமுகன் நாட்டியத் தான் -2
இந்தப்பாடலையும் ஈற்றுச் சீரை முதற்சீராக்க
நாட்டியத்தான் தந்தமகன் கொம்பெடுத்த நாட்டானை
கோட்டெழுத்தைத் தந்தவனை நம்புகவி நாயகனை
பாட்டெழுத வந்திடுவான் காட்டா வமுதகுடம்
காட்டிடுவான் தந்தி முகன்
பொருள்;- நாட்டியத்தான் தந்தமகன்-நடராஜர் தந்த மகன் என்றும் பொருள்
நாட்டியத்தான் – நர்த்தன கணபதி என்றும் தந்த மகன் என்பதற்கு தந்தத்தை உடைய மகன் என்றும் பொருள் கொள்க..
நாட்டானை –நாட்டு ஆனை- பிள்ளையார் பட்டி கற்பகத்தை
கோட்டெழுத்தை என்பது கோடு –மலையில் எழுதிய எழுத்தென்றும் கோட்டெழுத்தை-சுருக்கெழுத்தை என்றும் பொருள் கொள்க.
இப்பாடலில் இரு கதைகள் சுட்டப்பட்டது
அவை ஒன்று வியாசர் சொல்ல விநாயகன் தந்தத்தால் பாரதத்தை மலையில் எழுதியதை பாடி அவனை நம்புக விநாயகனை என்றும் நம்பு கவிநாயகனை என்றும் மடக்காக பாடப்பட்டது. விநாயகன் தானே முதல் சுருக்கெழுத்தர்…
மற்றொன்று
வானவர்கள் விநாயகனை வணங்காததால் அமுதகுடத்தை மறைத்துவைத்துப்பின் காட்டினானே அந்த கள்ளவாரணன்(திருக்கடவூர் விநாயகன்) திருவிளையாடலை பாடி அவனை வணங்கினால் பாட்டெழுத உதவிடுவான் என்று பாடப்பட்டது
ஒரே வெண்பா மூன்று வடிவில் பாடப்பட்டதால் இது பிறிதுபடு பாட்டு வகை சித்திர கவியே.