நேரம் பொன்னானது

இன்றைய நாகரிக அவசர உலகில் மக்கள் பறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் 'நேரம்' முக்கியப் பங்கு வகிக்கிறது. நேரம் மிக மதிப்பு மிக்கதும், பொன்னானதும் ஆகும். யார் ஒருவரும் நேரத்தை வீணாக்கக்கூடாது. கடந்து போன நேரத்தையோ, நாளையோ திரும்பப் பெற முடியாது.

சாதாரணமானவர்கள் நேரத்தின் மதிப்பறியாமல் வீணாக சோம்பித் திரிவார்கள். வீண் பேச்சு, சீட்டாட்டம், குடியில் பயனற்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்பார்கள். நற்குடிப் பிறந்தவர்கள் காலத்தின் பயனறிந்து, நற்காரியங்களில் நேரத்தைச் செலவு செய்து நற்பெயர் பெறுவார்கள்.

செய்யும் காரியங்களை காலமறிந்து செய்வார்கள். நினைத்த நற்காரியத்தை நினைத்த மாத்திரத்தில் திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். நாம் செய்யும் நற்காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. வாழ்க்கையில் முன்னேற நேரம் தவறாமை மிக முக்கியமாகும். செல்ல வேண்டிய இடங்களுக்கு, 'ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட, மூன்று மணி நேரம் முன்னே சென்று விடுவது நல்லது' என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் சொல்கிறார்.

சாதாரண எறும்புகள் கூட எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்திருக்கலாம். அவைகள் காலம், நேரம் பார்ப்பதில்லை. தடைகளைக் கண்டு அஞ்சுவதில்லை. தன பயணத்தைத் தள்ளிப் போடுவதில்லை.

நேரத்தின் பயன்பாட்டையும், அவசியத்தையும் அனைவரும் உணர்ந்து போற்றி கவனமாக செயலாற்றினால் வாழ்க்கையில் உச்சத்தையும், உயர்வையும் அடைவது உறுதி. இதனையே திருவள்ளுவர்,

"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்"

என்று கூறி நம்மை வழிப்படுத்துகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-15, 3:50 pm)
பார்வை : 5077

மேலே