நானும் என் உயிரும் - உதயா
ஒவ்வொரு சந்திப்பிலும்
அதிகாலை வானமும்
அந்தி வானமும்
விலக்கிச் செல்ல
வைரங்களை பட்டைத்தீட்டியவாறே
பவள முத்துகள் ஒவ்வொன்றாய்
மலரத் தொடங்கின
மழைக்காணா நிலங்கள்
மழைதனைக் கண்டவுடன்
தான் நிகழ்த்தும் காட்சிகளாய்
நொடிகள் மாறத் தொடங்கின
பஞ்ச பூதங்களின் துருவங்களும்
சூரியனும் சந்திரனும்
தன் துணையுடன் இணைந்து
வளம் வரத் தொடங்கின
உயிர்கள் உயிர் பெற்று
மடியோடும் நெஞ்சோடும் படர்ந்து
கண்விழிக்க தொடங்கின
தேன் மெதுவாக
பூவிற்குள் புகுந்து
மலர்ந்தப் பூவினை
ஓயாமல் மலரச் செய்தன
கனத்த புன்னகை மழையில்
இதமான தென்றல்
கவிதையாய் வீசப்படும் போது
வெட்கம் சாரலாய் மாறியிருந்தன
அமுத சுனைகள் சேர்ந்து
புல்லின் நுனியில்
பளிங்கு மண்டபம் புகாதவாறு
பனித்துளிகளைத் தூவத் தொடங்கின
காற்றின் அணுக்களாய்
யுகங்களைப் பிரித்து
விழி மூடா நித்திரையில்
கனவாக புகுத்தி
நொடியின் திசுவிற்குள்
தொலையச் செய்தன
எங்களை பிரித்து இணைக்கும்
இடைவெளியாக
ஒவ்வொரு நாட்களிலும்
மீண்டும் ஒரு எட்டுமணி நேரம்
எண்ணிலடங்கா தசாயுகங்களாய்
என்னையும் என்னவளையும்
கடந்துச் சென்றன